பஞ்ச அங்கங்களில் ஒன்றானது கரணமாகும்.திதியில் பாதி கரணமாகும்.ஒரு திதி என்பது 12 பாகை ஆகும்.அதில் பாதி 6 பாகை ஒரு கரணமாகும்.திதியை இரண்டாகப் பிரித்து திதியின் முற்பாதியில் ஒரு கரணமும்,பிற்பாதியில் ஒரு கரணமும் இயங்கும்.அதாவது 30 திதிகளுக்கு மொத்தமாக 60 கரணங்களாக சுழற்சி முறையில் இயங்கும்.மொத்த கரணங்கள் 11 ஆகும்.
அவை,
1) பவம்
2) பாலவம்
3) கௌலவம்
4) தைதுளை
5)கரசை
6)வணிசை
7)பத்திரை
8)சகுனி
9)சதுஸ்பாதம்
10)நாகவம்
11)கிம்ஸ்துக்னம் ஆகும்.
இதில் முதல் 7 கரணங்கள் ஸ்திர முறையிலும்,4 கரணங்கள் சர நிலையிலும் இயங்கும் நண்பர்களே.
ஒரு ஜாதகத்தில் ராசி,லக்னம், நட்சத்திரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கரணத்திற்கும் கொடுக்கவேண்டும்.சந்திரனின் 16 நாட்கள் வளர்பிறை எனவும்,16 நாட்கள் தேய்பிறை எனவும் ஒரு மாதமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.இதில் வளர்பிறையில் 15 திதிகளும்,தேய்பிறையில் 15 திதிகளும் வரும்.(அமாவாசை,பௌர்ணமி திதி உட்பட).மொத்தம் உள்ள 11 கரணங்களில் 7 கரணங்கள் நிலையான கரணங்கள்.மீதி 4 கரணங்கள் நிலையற்ற கரணங்கள்.அதாவது நகரும் தன்மை கொண்ட கரணங்களாகும்.
இதில் அமாவாசை மறுநாள் வரும் பிரதமை திதியின் பிற்பாதியில் பவ கரணம் ஆரம்பிக்கும்.துதியை திதிக்கு பாலவ,கௌலவ கரணங்களும்,திருதியை திதிக்கு தைதுளை,கரசை கரணமும்,சதுர்த்தி திதிக்கு வணிசை,பத்திரை கரணமும்,பஞ்சமி திதிக்கு மீண்டும் பவ,பாலவ கரணமும் என சுழற்சி முறையில் 7 கரணங்கள் வரும்.மீதம் உள்ள 4 கரணங்களில் சகுனி கரணம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் பிற்பாதியில் வரும்.சதுஸ்பாதம்,நாகவம் கரணங்கள் அமாவாசை முற்பாதி,பிற்பாதியில் வரும்.கிம்ஸ்துக்னம் கரணம் வளர்பிறை பிரதமை முற்பாதியில் வரும். இந்த 4 கரணங்கள் இந்த இடத்தில் மட்டுமே வரும்.மற்ற 7 கரணங்களும் மாறி மாறி வரும்.வளர்பிறையில் 15 திதிகளுக்கும்,தேய்பிறையில் 15 திதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 30 நாட்களுக்கும் அட்டவணை பதிவிட்டுள்ளேன். அட்டவணையைப் பார்த்தால் எளிதில் புரியும் நண்பர்களே.
இந்த கரணங்களில் பவம், பாலவம், கௌலவம், தைதுளை, கரசை, சுப கரணங்களாகும். வணிசை, பத்திரை, சகுனி, சதுஸ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் அசுப கரணங்களாகும். இதில் ஒவ்வொரு கரணங்களுக்கும் விலங்குகளும், பறவைகளும் உருவங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் செய்யக்கூடிய செயல்கள் மற்றும் காரியங்களில் நன்மையான பலன்களை அனுபவிக்க வேண்டுமென்றால் ஹோரை பார்ப்பதுபோல், 11 கரணங்களில் சுபம், அசுபம் பார்த்து காரியங்களில் ஈடுபட்டால் நிச்சயமாக காரியம் கைகூடும் நண்பர்களே. இனி கரணங்களின் குணங்களைப் பற்றி பார்க்கலாம்.
பவ கரணம்
பவ கரணத்தில் பிறந்தவர்கள் சற்று ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்தாலும்,மிகவும் பெருந்தன்மையான குணங்களை பெற்றிருப்பர். பேராசைப்படாமல் தங்களுக்கு கிடைத்ததைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை வாழ்வார்கள். இக்கரணத்திற்கான விலங்காக சிங்கம் இருப்பதால்,வீர,தீர சாகசம் புரியும் ராணுவம்,காவல்துறை போன்ற பணிகளில் இவர்கள் சிறப்பாக பணிபுரிவார்கள்.
பாலவ கரணம்
பாலவ கரணத்தில் பிறந்தவர்கள் அழகான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.மிகுந்த தைரியசாலிகளான இவர்கள் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி அதில் வெற்றியும் பெறுவார்கள்.அதே நேரத்தில் பிறருக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத்தயங்க மாட்டார்கள். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர்கள் அது சம்பந்தமான துறைகளில் சாதனைகள் புரிவார்கள். இக்கரணத்தவர்களுக்கான விலங்கு புலியாக இருப்பதால் எந்தக் காரியமாக இருந்தாலும் பதுங்கி பாய்பவர்களாக இருப்பார்கள்.
கௌலவ கரணம்
கௌலவ காரணத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இக்கரணத்தில் பிறந்த ஒரு சிலர் தங்களின் சுயநலம் காரணமாக இரக்கமற்றவர்களாகவும், பிறருக்கு துன்பம் விளைவிப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களிடம் அவப்பெயரைச் சம்பாதிப்பார்கள், இதன் காரணமாக இவர்கள் தங்கள் வாழ்வில் மிகவும் கஷ்டப்படுவார்கள். எந்த ஒரு நல்ல காரியத்தையும் இக்கரணத்தில் துணிந்து செய்யலாம். இக்கரணத்தின் விலங்காக பன்றி இருப்பதால் மூர்க்கத்தனம் இருக்கும்.
தைதுளை கரணம்
தைதுளை கரணத்தில் பிறந்தவர்கள் எப்போதுமே இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு பிரச்சனையில் தங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும்,அதை அதிகாரத் தன்மையுடன் தீர்க்காமல் அமைதியான முறையில் தீர்ப்பார்கள். இயற்கையிலேயே இவர்கள் மனஉறுதி கொண்டவர்களாக இருப்பதால், எப்படிப்பட்ட சவால்களையும் ஏற்றுக் கொண்டு அதில் வெற்றி அடைவர். பொதுவாக எதிர்காலத்திற்கான பாதுகாப்பைக் கொடுக்கும் உத்தியோகங்களில் சேர்ந்து பணிபுரிவர். இக்கரணத்திற்கான பறவையின் உருவம் கழுகாக இருப்பதால் பார்வைத்திறன் உள்ளவர்களாக இருப்பார்கள்.
கரசை கரணம்
கரசை கரணத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் திட்டமிட்டு செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். சிறந்த பேச்சுத்திறனும் அதிகம் பேசக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். கற்பனைத்திறன் அதிகம் கொண்டவர்கள் என்பதால் ஓவியம்,சிற்பம்,கவிதை,நாடகம்,நடனம் போன்ற கலை சம்பந்தமான துறைகளில் சாதிப்பர்.இவர்களுக்கு சற்று சலன புத்தி இருப்பதால்,பெண்கள் விஷயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இகரணத்திற்கான உருவம் யானை.
வணிசை கரணம்
வணிசை கரணத்தில் பிறந்தவர்களிடம் சிறந்த நிர்வாகத்திறன் இருக்கும். மேலும் வியாபாரத்தில் சாதிக்கக்கூடிய மிகச் சிறப்பான புத்திசாலித்தனம் இருப்பதால் இவர்கள் எவ்வகையான தொழில்களிலும் முன்னிலைக்கு வந்து விடுவர். மற்றவர்களிடம் இனிமையாகப் பேசி தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். காரியங்களைத் திட்டமிட்டு செய்து வெற்றிகளைப் பெறுவார்கள்.இக்கரணத்திற்கான விலங்கு எருது.
பத்திரை கரணம்
பத்திரை கரணத்தில் பிறந்த சிலர் தீய செயல்களைப் புரிவர்களாக இருப்பர். இவர்களுக்கு சற்று மந்த குணம் இருக்கும் காரணத்தினால் எக்காரியத்தையும் சற்றுத் தாமதமாகவே செய்து முடிப்பர். ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பர். மனிதாபிமான குணம் இருக்கும். இவர்களை யாரவது தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தால் இவர்களும் வெற்றியாளர்களாகலாம். இக்கரணத்திற்கான பறவை கோழி.
சகுனி கரணம்
சகுனி கரணத்தில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள். புத்திசாலித்தனமும், சிறந்த அறிவாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமிருப்பதால் இவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். இவர்கள் தங்களை மிகவும் பக்குவப்பட்ட மனிதர்களாக மாற்றிக்கொள்வார்கள். போர்புரியவும், நோய் தீர மருந்து உட்கொள்ளும் செயல்களை இக்கரணத்தில் செய்தால் சிறந்தப் பலன்களைக் கொடுக்கும். இக்கரணத்திற்கான பறவை காக்கை.
சதுஸ்பாத கரணம்
சதுஸ்பாத கரணத்தில் பிறந்தவர்கள் சுதந்திரத்தன்மை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே பிறருக்கு கீழ் அவர்கள் உத்தரவுகளுக்கு பணிந்து வேலை செய்யாமல்,தானே முதலாளியாக இருக்கக் கூடிய வியாபாரத் தொழிலில்களையே இவர்கள் செய்வார்கள்.பிறரிடம் உண்மையாக நடந்துகொள்வார்கள். மிகவும் கடினமாக உழைக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இக்கரணத்தில் சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் கொடுப்பது சிறந்த பலன்களைக் கொடுக்கும். மேலும் இவர்கள் தத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபடுவர். இக் கரணத்திற்க்கான விலங்கு நாய்.
நாகவ கரணம்
நாகவ கரணத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பூமி சம்பந்தப்பட்ட சுரங்கம், தாதுக்களை வெட்டி எடுப்பது போன்ற தொழில்களையோ, வியாபாரங்களையோ செய்வர்.நல்ல குணாதியசங்கள் இவர்களிடம் காணப்படும். நாக கரணத்தில் பிறந்த காரணத்தால் இவர்களிலில் சிலருக்கு விஷப்பாம்புகளை மயக்கி பிடிக்கும் ஆற்றல் இருக்கும். இவர்கள் ஆன்மிக வழியில் சென்றால், சிறந்த ஞானியாகக் கூடிய அமைப்பு உள்ளது. இக்கரணத்தில் பிறந்த ஒரு சிலர் பிறருக்கு தீமை விளைவிக்கும் காரியங்களைச் செய்வர். இக்கரணத்தின் உருவம் பாம்பாக இருப்பதால் சிலநேரங்களில் வார்த்தைகளில் விஷத்தை கக்குவார்கள்.
கிம்ஸ்துக்ன கரணம்
கிம்ஸ்துக்ன கரணத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு அதிகம் தீங்கு செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்.ஆனால் சிறந்த அறிவாற்றலைக் கொண்டிருப்பார்.தீயவர்களுன் சகவாசம் கொள்ளாதவரை இவர்கள் தவறான வழியில் செல்வதில்லை. இவர்களுக்கு சரியான ஆன்மிக வழிகாட்டி அமைந்து, அவர்கள் சொற்படி நடந்தால் சித்தி நிலை அடையக்கூடிய யோகம் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கான விலங்கின் உருவம் புழு.
Credit: ஞானக் களஞ்சியம்