கேது தசை அல்லது கேதுவால் ஜனன ஜாதகத்தில் ஏற்படும் தடை/தாமதம்/விரக்தி போன்றவற்றை எதிர்கொள்ள பொதுவாக எல்லோரும் விநாயகரை வழிபட பரிந்துரைப்பார்கள், என் அனுபவத்தில் பலர் இவ்விதம் விநாயகர் வழிபாடு செய்து இன்னல்கள் அதிகரித்து காரணம் புரியாமல் தொடந்து வழிபட்டு சிக்கிக்கொண்டு முழிப்பதை பார்த்துள்ளேன், இதனை நான் என்னிடம் ஆலோசனை பெரும் ஜாதகருக்கு சுட்டிக்காட்டும் போதும் அவர்கள் ஏன் சார் கேதுவுக்கு அதிதேவதை விநாயகர் தானே பின்னர் அவரை வழிபடும் போது ஏன் இன்னல்கள் வரப்போகிறது என்று எதிர்கேள்வி கேட்பார்கள், இதில் பலருக்கு சந்தேகமும் குழப்பமும் உண்டு அதனை தெளிவுபடுத்தவே இப்பதிவு.
கேது ஒரு ஆத்மாவின் நதிமூலம் ரிஷிமூலத்தை முற்றிலும் தெரிந்தவர், அந்த ஆத்மா பல பிறவிகளில் சேர்த்த கர்மவினைகள் (நன்மை, தீமை) அத்தனையின் கணக்கை பராமரித்து (இதனால் தான் சித்திரகுப்தனை கேது என்கிறோம்), சனி (ஈசனால் படைக்கப்பட்ட காலச்சக்கர கண்காணிப்பாளர்) யிடம் ஒப்படைத்து அந்த ஆத்மா எடுக்கும் பிறவிக்கு தகுந்த கர்மங்களை அனுபவிக்க வைப்பார், இதனால் தான் கேதுவின் அதிதேவதையான விநாயகரை வழிபடுவது பெரும்பாலானவர்களுக்கு சாதக பலனை கொடுப்பதில்லை, ஒருவர் ஜாதகத்தில் கேது நற்பலன்களை கொடுக்கும் நிலையில் இருக்கும் போதே கேதுவின் அதிதேவதையான விநாயகரை தொடர்ந்து வழிபட வேண்டும், இல்லை என்றால் தசைக்கு ஏற்ப கர்ம பலன்கள் கேதுவால் அனுபவிக்க நேரும் என்பதை நினைவில்கொள்ளுங்கள், ஜாதகத்தில் கேது நிற்கும் நிலைக்கு ஏற்ப முழு ஜாதகத்தை ஆய்வு செய்து உரிய தெய்வத்தை வழிபடும் போதே கேது தசையிலும்/புக்தியிலும், ஜாதகத்தில் கேதுவால் ஏற்படும் தடைகளையும் எதிர்கொள்ளும் வலிமையை பெற இயலும்.
இந்த பதிவை படிக்கும் சிலர் நான் பல வருடங்களாக விநாயகர் சிலை/படம் போன்றவற்றை வைத்து வழிபட்டுவருக்கிறேன் நன்றாகவே இருக்கிறேன் என்பார்கள், ஆனால் உண்மை அதுவல்ல அந்த நபரின் வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்வுகள் விநாயகர் வழிபாடுகளால் தான் என்பதை உணரவில்லை என்பதே உண்மையாகும், விநாயகர் முழு முதற்கடவுள் மறுப்பதற்கில்லை அவரை அளவோடு வழிபட நன்மையே ஆனால் கேதுவின் ஆற்றலை கட்டுப்படுத்த வழிபடுவது எல்லோருக்கும் நன்மையளிப்பதில்லை என்பதே பதிவின் உட்கருத்து.