சூரியனுக்கும் சரண்யூ தம்பதியருக்குப் பிறந்தவர்கள் என வேதம் சொல்கிறது. குதிரை முகம் கொண்டவர்கள். இவர்கள் இரட்டையர்கள். இவர்கள் தேவ மருத்துவர்கள் ஆவர்.
அஸ்வினி தேவர்களில்
(1) ஒருவர் பெயர் நாசத்ய (அசத்தியம் இல்லாதவர்),
(2) மற்றொருவர் பெயர் தஸ்ரா (ஒளி வீசும்).
சிவபெருமானிடமும் விஷ்ணு பெருமானிடம் இருந்தும் நான்முகனான பிரம்மதேவன், ஆயுர்வேத வைத்திய முறைகளை அறிந்து, அதற்கான விளக்க உரை எழுதி தட்ச பிரஜாபதிக்கு உபதேசித்தார். அவரிடம் இருந்து அஸ்வினி குமாரர்கள் ஆயுர்வேத மருத்துவக் கலையைக் கற்றுக்கொண்டனர். தேவலோக மருத்துவர் பதவியை அடைய பரமசிவனை நோக்கி கடும்தவம் புரிந்து, அந்த பதவியை அடைந்தார்கள். தேவர்களுக்கான மருத்துவர்கள் ஆவார்கள்.
மகரிஷி ததீச்சர் பிரம்ம வித்யாவை இந்திரனிடமிருந்து கற்றுக் கொண்டார். பிரம்ம வித்யா என்பது நோயுற்ற மனிதர்களை இறக்க விடாமல் காக்கும் மந்திரம் ஆகும். இந்திரன் ததீச்சருக்கு பிரம்ம வித்யாவை எவருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று ஆணையிட்டார். அஸ்வினி குமாரர்கள் ததீச்சரிடம் பிரம்ம வித்யாவை கற்றுக் கொடுக்குமாறு வேண்டினார்கள். ஒருவர் கேட்கும் போது கற்றுக் கொண்ட வித்யாவை சொல்லித் தராமலிருப்பது அதர்மத்துக்கு துணை செல்வதென்று ததீச்சர் கருதினார் .
இந்திரனுடைய ஆணையை அறிந்த அஸ்வினி குமாரர்கள் ததீச்ச்சரின் தலையை எடுத்து அவருக்கு குதிரைத் தலையை பொருந்தினார்கள். அதன் பிறகு ததீச்சர் பிரம்ம வித்யாவை அஸ்வினி குமாரர்களுக்கு கற்றுக் கொடுத்தார். இதை அறிந்த இந்திரன் கோபம் கொண்டு ததீச்ச்சரின் குதிரை தலையை வெட்டி எறிந்தார்.
அஸ்வினி குமாரர்கள் ததீச்சருக்கு மீண்டும் அவருடைய தலையை பொருந்தினார்கள். இதனால் ததீச்சர் அஸ்வஹீரா என்று மற்றோரு பெயரால் அழைக்கப்படுகிறார். அஸ்வனிகளைப் பற்றிய குறிப்புகள், ரிக் வேதம், புராணம் மற்றும் மகாபாரதத்திலும் உள்ளது. மனிதர்களுக்கு முதலில் மருத்துவம் பார்த்தவர்கள் இவர்கள். நோயாளிகளைக் குணப்படுத்துவது அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரே!
ஆபத்தில் மாட்டிக்கொண்டவர்களை விரைந்து சென்று காப்பாற்றுவது அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரே! தொல்லையில் சிக்கியவர்களின் கஷ்டங்களை அகற்றுவது அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரே!
தீயில் மாட்டியோரையும் கடலில் மாட்டியோரையும் காப்பாற்றியவரும் இவர்களே என இவர்களை பற்றி ரிக் வேதத்தில் இருக்கிறது. மக்களுக்காகவும் தேவர்களுக்காகவும் முதல் மருத்துவர் இவர்களே. அஸ்வினி தேவர்கள் அவர்களுடைய தேரில் சூரியனையும் சந்திரனையும் ஏற்றிச் செல்கின்றனராம், தேனையும் கொண்டு செல்கின்றனராம்.
அவர்களுடைய தேரை குதிரை, கழுதைகள், கழுகு அன்னங்கள் செலுத்துவதாகவும் கவிகள் பாடியுள்ளனர். அவர்கள் இருக்கும் இடம் மலை உச்சி, ஆகாயம், அந்தர வானம், தாவரங்கள், வீடுகள் என்று பலவிதமாகச் சொல்லபட்டுள்ளன. சங்கத் தமிழ் இலக்கியத்தில் அணங்குகள் பற்றிய குறிப்புகளை இவைகளுடன் ஒப்பிடலாம்!
மஹாபாரதத்தில் பாண்டுவின் இரண்டாவது மனைவி மாதுரி இந்த அஸ்வினி தேவர்களை பிள்ளை வரம் வேண்டிப் பிறகு பிறந்தவர்களே நகுலனும், சகாதேவனும். இருவரில் சகாதேவன் சோதிடத்திலும் நகுலன் குதிரைகளைப் பழக்குவதிலும் வல்லவர்கள். அஸ்வினி புத்திரர்கலானதினாலேயே இவர்களுக்கு இந்தக் கலைகள் கை வந்தன என்கிறது இதிகாசமும் புராணமும் .
இன்றும் கூட வங்காள மாநிலத்தில் மருத்துவர்களை அஸ்வினி குமார்கள் என்றே அழைக்கிறார்கள்.
இந்த அஸ்வினி தேவர்கள் தம் தந்தையார் சூரிய பகவானின் பனிரெண்டு குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டும் சாரதிகளாகவும் இருப்பார்களாம். இவர்களது பெயரால் ஐப்பசி மாதம் சமஸ்கிருத மொழியில் குறிக்கப் பெறுகிறது. சமஸ்கிருதத்தில் அஸ்வினா என்றால் தமிழில் ஐப்பசி என்கிறோம்.
யாகங்கள் நடைபெறுகையில் அஸ்வினி தேவர்கள் வணங்கப்படுவதாக ரிக் வேதம் கூறுகிறது. இந்த அஸ்வினி குமாரர்கள் எந்நேரமும் உலகைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
அப்படி அவர்கள் நம்மில் யாரோ ஒருவரின் அருகில் வருகையில் நாம் என்ன மனதில் நினைக்கிறோமோ அது அப்படியே பலிக்கட்டும் என்று ஆஷிர்வதித்து (அதாவது நாம் நல்லது நினைத்தாலும் சரி கெட்டதும் நினைத்தாலும் சரி எதுவானாலும் நன்றாகக் கவனியுங்கள் கெட்டதும் கூடப் பலிக்கட்டும் என்று பாரபட்ச்சமின்றி ஆசிர்வாதம் அளித்து விட்டுப் போய் விடுவார்களாம்! இதை சமஸ்கிருதம் மிக எளிதாக "ததாஸ்து" என்று சொல்கிறது அதாவது "அப்படியே ஆகட்டும்" என்று பொருள் கொள்ளலாம்.)
அறுவை சிகிச்சை என்பதே அஸ்வினி குமாரர்களால்தான் முதல் முதலில் உருவாக்கப்பட்டது. அவர்கள் மனித உடம்பில் நீர், நெருப்பு, காற்று ஆகிய மூன்று பூதங்களின் கைவரிசையால் தான் சுகமும், சுகக் கேடும் ஏற்படுகிறது என்கிறார்கள். அதாவது வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்று சக்திகளின் ஏற்ற இறக்கத்தால் தான் நோய்கள் வருவதும், போவதும் நடைபெறுகிறது என்பது அவர்களின் கருத்து
மனிதனை இயக்கவும் அதிஷ்டான தேவதைகள் உண்டு.
ஆன்மாவுக்கு – பரமாத்மா
மூக்கிற்கு – அஸ்வினி குமாரர்கள்
வாக்கிற்கு – அக்கினி தேவன்
கண் புலனுக்கு – சூரியதேவன்
செவிப்புலனுக்கு _ திக் தேவதைகள்
மனத்துக்கு – சந்திர தேவன்
தொடு உணர்ச்சிக்கு _ வாயுதேவன்
மேற்கண்டவைகள் இயங்குவது போல் தோன்றினாலும், உண்மையில் அவற்றின் பின்னால் நின்று இயக்குபவர் அந்தர்யாமியாகிய இறைவனே -என்கிறார் ரிஷி யக்ஞ வல்கியர். (பிருக தாரண்ய உபநிடதம்)
ரிக்_வேதத்தில் காலிழந்த ஒருவருக்கு, தேவலோக வைத்தியர்களான அஸ்வினி குமாரர்கள் செயற்கையாக இரும்புக்காலை பொறுத்தினார்கள் என்றும், கண்ணிழந்தவர்க்கு, பார்வை வரச் செய்தார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.
விநாயகரின் தலையை சூலம் கொண்டு எடுத்த சிவபெருமான் வடக்கில் தலை வைத்து படுத்திருக்கும் சிசுவின் தலையைக் கொண்டு வருமாறு தேவர்களிடம் கூறுகிறார். அவர்கள் ஒரு யானையின் தலையைக் கொண்டு வந்தனர். அஸ்வினி குமாரர்கள் அந்தத் தலையை விநாயகருக்குப் பொருத்தினர். பிறகு சிவபெருமான் அவருக்கு உயிர் தந்தார்.
சோமயாகம் நடைபெறும் செய்தி கேட்டு விஷ்ணு யாகம் நடக்கும் இடம் வில்லோடு வந்து நிற்கிறார். வில்லின் வளைந்த மூங்கில் பாகத்தின் ஒருமுனை தரையில் இருக்கிறது. இன்னொரு முனை விஷ்ணுவின் தாடையில் இருக்கிறது. இந்த முனைகளுக்கிடையே தான் நாண் எனப்படும் கயிறு இழுத்துக் கட்டப்பட்டுள்ளது. வில்லை தன் தாடை மூலமாகவே நிலைநிறுத்தி நின்றார் மகா விஷ்ணு. யாகத்தின் சோமரஸம் முழுவதும் தனக்கே வேண்டும் மற்ற தேவதைகளுக்குக் கொடுக்கக்கூடாது.
இதுதான் அவரின் கோரிக்கை. யாகம் நடத்துபவர்கள் செய்வதறியாது இருக்க, அந்த நேரத்தில் சில கறையான் பூச்சிகள் வில்லின் மீது ஏற ஆரம்பிக்க.
விஷ்ணுவுடைய வில்லின் நாண் வழியாக ஏறத் தொடங்கிய கறையான்கள், மெல்ல, மெல்ல ஏறி... விஷ்ணுவின் தாடைப் பகுதியை நெருங்கின. கறையான்கள் சரசரவென நாணை தின்ன ஆரம்பிக்க.. திடீரென நாண் அறுந்தது. இழுத்து வளைத்துக் கட்டப்பட்டிருந்த வில்லின் மூங்கில் படாரென மேல் நோக்கி வேகமாக விசையோடு எழும்ப...
அந்த கணத்திலேயே விஷ்ணுவின் தலை மூங்கில் மேலெழும்பிய வேகத்தில் மேல் நோக்கி பிய்த்து எறியப்பட்டது. யாகத்தின் உருவே ஆன விஷ்ணுவின் தலை கழுத்திலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டு மேலே பறந்தது. இதைப் பார்த்தவர்கள் பதறிபோய் விஷ்ணுதான் யாகம். யாகம் தான் விஷ்ணு.
அப்படிப்பட்ட விஷ்ணுவின் தலையே தனியே போனது என்றால் யாகம் பாதியிலேயே நின்றுவிடுமே என கலக்கப்பட்டு நேராக அஸ்வினி குமாரர்களிடம் சென்று விஷ்ணுவின் தலை தனியாக போனதை சொல்லி தலையை ஒட்டித்தர வேண்டினர்.
நாங்கள் தைல வைத்ய சாஸ்திரப்பட விஷ்ணுவின் தலையை ஒட்ட வைக்கிறோம். யாகத்துக்கு மறுபடி எந்தத் தடங்கலும் வராமல் நாங்கள் துணை இருக்கிறோம் ஆனால், இதுக்குப் பிரதியுபகாரமாய்... யாகத்துல எங்களையும் இணைத்து சோம ரஸத்துல கொஞ்சம் எங்களுக்கும் தரவேண்டும். இதற்கு ஒத்துக்கொண்டால் நாங்கள் பெருமாளின் தலையை ஒட்ட வைக்கிறோம் என சொல்ல, வேறு வழி இல்லாமல், சோம யாகத்தில் அஸ்வினி தேவதைகளுக்கும் ஒரு பங்கு தருகிறோம்... என உறுதி கொடுக்கப்பட்டப பிறகுதான். விஷ்ணுவின் தலையை தைலம் தடவி கழுத்தோடு ஒட்ட வைத்தனர் அஸ்வினி குமாரர்கள்.
சியவனரின் முதுமை நீங்கி இளமை கொடுத்தவர்களும் இவர்களே.
துருக்கி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப்படும் (கி.மு. 1380) கடவுளரில் அஸ்வினி தேவர்களும் இருக்கின்றனர்!
ரிக் வேத துதி வரிசையில் இவர்கள் பெயர்கள் இருப்பதால் கி.மு 1400-க்கு முன்னரே ரிக்வேதம் சிரியா-துருக்கி பகுதிக்குச் சென்றுவிட்டது உறுதியாகிறது!!!!!
அஸ்வினி குமாரர்கள் குறித்து, ரிக் வேதத்தில் 376 இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.
அசுவனி தேவர்கள், பகவானின் திருவருட் கிருபையால், நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரமாக வானிலே ஒளி வீசும் பேறு பெற்றனர்.
27 நட்சத்திரங்களின் வரிசையில் முதலாவதாக வரும் நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவானாவார்.
இந்த நட்சத்திரத்தின் தேவதைகள் குதிரை முகம் கொண்ட அஸ்வினி தேவர்கள் ஆவர். அஸ்வினி குமாரர்கள் தேவ மந்திரம்.
அஸ்வினி தேவதே ஸ்வேத வர்நொவ்
தாவஸ்விநௌ து மஹ
சுதா சம்பூர்ண கலச கராலஜெள
அஸ்வ வாசு கநௌ