ஓர் ஆன்மிக வழிகாட்டி பணம் சம்பாதிப்பதைப் பற்றி, செல்வந்தராவது பற்றிப் பேசலாமா?
பணம் என்றால் தீமையல்லவா?
செல்வந்தர்கள் எல்லாம் தீய வழியில் சொத்து சேர்த்தவர்கள்தானே?
ஊரை அடித்து உலையில் போட்டவர்கள்தானே பெரும்பணக்காரர்கள்?
முதலீடு இருந்தால்தானே செல்வம் சேர்க்க முடியும்?
பெரிய குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செல்வந்தர்களாகிவிடுகிறார்கள் இல்லையா?
கோடீஸ்வரர் ஆவதெல்லாம் குருட்டு அதிர்ஷ்டம்தானே? அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்தானே?
கடுமையாக உழைத்தால்தானே பணம் சேரும்?
சிக்கனமாக செலவு செய்து பணத்தை சேமித்தால் எவர் வேண்டுமானாலும் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் தானே?
குறுக்கு வழியில் சென்றால் ஈஸியாக கோடிகளைக் குவித்து செல்வந்தராகிவிடலாமே?
செல்வத்தைப் பற்றித்தான் நமக்கு எவ்வளவு தவறான புரிதல்கள் இருக்கின்றன என்பதை யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பணம் எல்லாருக்கும் தேவைப்படுகிறது. செல்வந்தராக வேண்டும், நினைத்த வாழ்க்கையை வாழவேண்டும் என்கிற எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறது. இன்றைய வாழ்க்கை முறையை மாற்றியே தீரவேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. ஆனால், அதற்கான பாதை மிகவும் கடினமானது என்று அஞ்சுகிறார்கள். தன்னால் உறுதியாக முடியாது என்று நம்புகிறார்கள். துவண்டு போகிறார்கள். அல்லது கண்டதையும் யோசித்து, பலதையும் செய்து, மேலும் மேலும் நட்டமடைந்து தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் துயரத்தில் ஆழ்த்துகிறார்கள்.
ஆனால், நண்பர்களே… உண்மையில் செல்வந்தராவதும் கோடிகளைக் குவிப்பதும் மிகவும் எளிதானது. உலகின் அனைத்து மனிதர்களாலும் சாத்தியமானது. அபூர்வ சக்திகள் அதற்குத் தேவையில்லை. தேவையானது ஒன்றேதான். இயற்கையை, பிரபஞ்சத்தை, சிருஷ்டியைப் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள், தெளிவுகள்தான்.
சூத்திரம் புரியாமல்தான் இங்கே பலரும் அல்லாடுகிறார்கள். ஆட்டத்தின் விதிகளைத் தெரிந்துகொண்டால், ஆட்டத்தைப் புரிந்துகொண்டால், அதுவே பாதி வெற்றி. இந்தப் பிரபஞ்சம் உங்களுக்கு எவ்வளவோ கொடுக்க முகம் நிறைய புன்னகையுடன் கைநிறைய புதையலுடன் காத்திருக்கிறது; நீங்களோ முகத்தைத் திருப்பிக்கொண்டு வேறெங்கோ ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்.
வாருங்கள் நண்பர்களே... ரகசியம் பேசுவோம்.
- குரு மித்ரேஷிவா