வாழ்வில் சற்று நிதானித்து உங்களுடைய தினசரிப் பழக்கங்களையும் கண்ணோட்டங்களையும் மாற்றுவதன் மூலம் மகிழ்ச்சியைக் கண்டு கொள்ளுங்கள்.
புகழ்பெற்ற ஜென் புத்த மதத் துறவியான ஷுன்மியோ மசுனோ, பல நூற்றாண்டுகால ஜென் தத்துவங்களை அலசி ஆய்வு செய்து, ஒரு நாளைக்கு ஒரு பாடம் என்ற வகையில், தெளிவான, நடைமுறைக்கு உகந்த, அன்றாட வாழ்வில் எளிதில் செயல்படுத்தத்தக்க 100 பாடங்களாகத் தொகுத்து வழங்கியுள்ளார். உண்மையான மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கைவசப்படுத்துவதற்கான எளிய வழிகளை நீங்கள் இந்நூலில் கற்றுக் கொள்வீர்கள்.
எதிர்மறையான உணர்ச்சிகளைக் களைவதற்கு மூச்சை ஆழமாக வெளியே விடுவது எப்படி, உங்களுடைய சிந்தனையைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு உங்கள் வீடு எளிமையாக இருக்கும்படி அதை ஒழுங்கமைப்பது எப்படி, உங்கள் மனத்திற்கு ஒழுங்கைக் கொண்டு வருவதற்காக முதல் நாள் இரவிலேயே உங்கள் காலணிகளை வரிசையாக அடுக்கி வைப்பது எப்படி, ஓர் ஒற்றை மலரை நட்டு வைத்து அது வளர்வதை கவனித்து வருவது எப்படி, உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது எப்படி ஆகியவற்றையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
ஷுன்மியோ மசுனோ, ஜப்பானிலுள்ள 450 ஆண்டுகள் பழமையான ஜென் புத்தக் கோவிலின் தலைமைத் துறவியாக இருந்து வருகிறார். பல பரிசுகளைப் பெற்றிருக்கும் ஜென் தோட்ட வடிவமைப்பாளரான அவர், உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜென் தோட்டங்களை உருவாக்கிக் கொடுக்கிறார்.
ஜப்பானிலுள்ள ஒரு பிரபல ஓவியக் கல்லூரியில் சுற்றுச்சூழல் வடிவமைப்புப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்ற அவர், உலகெங்கும் எண்ணற்றச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். ஹார்வர்டு கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் டிசைன், கார்னெல் பல்கலைக்கழகம், பிரவுன் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் அவர் நிகழ்த்தியுள்ள சொற்பொழிவுகள் குறிப்பிடத்தக்கவையாகும்.