காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை செய்யும் வேர் முடிச்சுகளை கொண்ட வெகு சில மரங்களில் புங்கை மரமும் ஒன்று. பரவலாக ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் பிரதேசங்களில் காணப்படும் மித மற்றும் வறண்ட நில தாவரம் ஆகும். ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான்.
எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது. இம்மரம் வெயில் காலத்தில் நல்ல குளிர்ச்சியான நிழல் தரும் மரங்களில் புங்கை மரம் சிறந்தது ஏனெனில் அவற்றின் இலைகள் சிறிதானவை, அடர்த்தியானவை, இம்மர இலைகள் ஊடுறுவும் காற்றை தடுக்காமல் நன்றாக அசைத்துவிடுவதால் அதன் சுற்றுச் சூழலை குளிர்த்தன்மையுடன் வைத்துக் கொள்வதுடன், அடர்த்தியான நிழலையும் தருகிறது.
புங்கை மரம் தமிழ்நாட்டின் பழமையான மரங்களில் ஒன்று. இம்மரம் நடுத்தர உயரமும் பசுமை மாறாத விரிந்த மேற்பரப்புடனும் கூடிய குட்டை அடிமரம் கொண்ட மரம். இந்தியாவின் பெரும்பகுதியில் நிழலுக்காகவும், அழகுக்காகவும் நட்டு வளர்க்கப்படுகிறது. சுந்தரவனக் கரையோரப்பகுதி, அந்தமான் மற்றும் தீபகற்ப இந்தியாவின் ஆற்றங்கரைகள், சாலை ஓரங்கள், கால்வாய் கரைகள், கடலோரப்பகுதி திறந்த விவசாயி நிலங்கள் என வறண்ட நிலம் சதுப்பு நிலம் உவர்மண்நிலம் வனப்பகுதி என எல்லா இடங்களிலும் காணலாம்.
இம்மரம் பருவகாலத்திற்கு ஏற்றவகையில் தம்மை வளர்த்துக் கொள்ளும் தன்மை உடையது. அதன் கொத்து கொத்தான பூக்கள் தேன்செறிந்து இருப்பதால் அவை பூக்கும் காலங்களில் வண்டுகளுக்கு கொண்டாட்டம் தான். வெள்ளை நிறத்தில் மல்லிகைப் பூப் போன்று காணப்படும். இம்மரப் பூக்கள் மூலிகை மருந்தாகவும் பயனளிக்கிறது, இதன் காய்கள் புருவம் சேர்த்த ஒரு கண் அளவுக்கு வளர்ந்து, உள்ளே ஒன்று அல்லது இரண்டு விதைகள் அமையப் பெற்றிருக்கும், பச்சை நிறத்தில் இருந்து முதிர்ந்த நிலையில் பொன் மஞ்சள் நிறத்திற்கு மாறி முற்றியதும் தானாகவே கீழே விழுந்துவிடும்.
புங்கை விதைகள் ஆமணக்கு போன்று எண்ணெய் தன்மை கொண்டவை, அவற்றின் எண்ணைகள் எரிசக்தி கொண்டவை இவை பயோடீசலாகவும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. கோடையில் மிக சிறிதளவே இலையுதிரும் ,பசுமை மாறா மரம், 3-4 நான்கு ஆண்டுகளில் முதிர்ச்சி அடையக்கூடிய மிதமான கடின மரம் ஆகும். நிழல் தரக்கூடிய, எளிதில் அதிக பராமரிப்பு இன்றி வளரக்கூடிய மரம் என்பதால் நெடுஞ்சாலைத்துறையினராலும் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ளது. இதன் விதைகளில் 25-40% எண்ணை இருப்பதே இதனை முக்கியமான மாற்று எரிபொருள் மரமாக கருதக்காரணம்.
ஏற்கனவே இதன் எண்ணை சோப்பு, விளக்கெரிக்க, பெயிண்ட்கள், ஆயுர்வேத மருந்து, இயற்கை பூச்சிக்கொல்லி ஆகியனத் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. கசப்பு தன்மை கொண்ட எண்ணை என்பதால் சமையலுக்கு பயன்படுத்துவதில்லை. வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு. புங்கை மரத்தின் மலர்கள், விதைகள், இலைகள், பட்டை,வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் விதை, எண்ணெய், மலர்கள், இலைகள், தண்டுப்பட்டை ஆகியவற்றில் இருந்து பல ரசாயனப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. கருஞ்சின், பொன்காப்பின், பொன்காக்ளாப்ரோன், பொன்கால், கரஞ்சாக்ரோமின், கனுகின், நீயோக்ளாப்ரின் போன்றவை, நோய் எதிர்ப்பு சக்தி புங்கன் கிருமிகளை அகற்றி உடலைத் தேற்றும் குணம் உடையது.
புங்க வேர் வேரில் எடுக்கப்படும் சாறு ஆழமான புழுவைத்த புண்களை ஆற்றும், பற்களை சுத்தப்படுத்தவும்,ஈறுகளை வலுப்படுத்தவும் பயன்படும். புங்கன் வேரை காடியில் அரைத்து விதை வீக்கத்திற்கு பற்றிட்டு வர வீக்கம் குறையும். புங்கன் வேர்ப் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல், ஈளை முதலியவை குணமாகும். புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சம அளவு எடுத்து கற்றாழை சாற்றால் அரைத்து சிறு உருண்டையளவு உட்கொள்ள எலி கடியினால் ஏற்படும் விஷம் முறியும்.
புங்க இலை புங்கன் இலையைக் குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த கணத்திற்குக் கொடுக்கலாம். புங்கன் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தாலும் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள் கட்டுப்படும். புங்கன் இலைச்சாற்றை வயிறு பொருமலுக்கும், கழிச்சலுக்கும் குறிப்பிட்ட அளவு உள்ளுக்குக் கொடுக்க குணம் தெரியும். புங்கன் இலையை அரைத்து ரத்த மூலத்திற்குப் பற்றிடலாம். இலைகளின் சாறு, இருமல், வாயுக்கோளாறு, அஜீரணம்,பேதி ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.
புங்க இலையை பயன்படுத்தி தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க இலைகளை, மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி துணியில் எடுத்து அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவலாம். நெஞ்சின் மீது பூசுவதால் நெஞ்சு சளி, இருமல் குறைகிறது. தலையில் பொடுகு இருந்தால் இதை தடவி பத்து நிமிடம் கழித்து குளித்தால், அரிப்பு சரியாகும். புங்க இலை தோலுக்கு ஆரொக்கியம் கொடுக்கிறது. தோல் மென்மை தன்மை அடைகிறது. அக்கி புண்கள், அம்மை கொப்பளங்கள் சரியாகிறது. புங்க இலையுடன் மஞ்சள் சேர்த்து தேனீராக்கி குடிப்பதன் மூலம் பசியின்மை, ஈரல் வீக்கம் சரியாகும். புங்க இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி குடித்து வந்தால் வயிற்றுப் புண் எனப்படும் அல்சர் குணமாகும்.
இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வந்தால் வீக்கம் குறைந்து, காயம் ஆறும். இலையை பச்சையாக அரைத்து வைத்துக் கட்டினாலும் வெட்டுக்காயம் விரைவில் மறையும். குழந்தைகளின் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறுகள், பேதி ஆகியவற்றுக்கு புங்க இலைச்சாறு கைகண்ட மருந்தாகும். புங்க மரத்தின் பால் புண்களையும், வாய்வையும் நீக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு பொன்போன்ற நிறத்தைக் கொடுக்கும். இந்த பாலை புண்களுக்குப் போட்டு வந்தால் விரைவில் அவை ஆறும்.
புங்க பூ மலர்கள் நீரிரிழிவு நோய்க்கு மருந்தாகும். நீரிழிவு நோயினருக்கு அதிக தாகம் ஏற்படும். இதற்கு புங்கம் பூவை கசாயமிட்டு அருந்தி வரலாம். புங்கன் பூவை தேவையான அளவுஎடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடிசெய்து 500 மி.கி. முதல் 1 கிராம் வீதம் உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும் புளிப்பு, வாயு பதார்த்தங்களை இச்சமயம் நீக்க வேண்டும். பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் தேனில் கொள்ள மதுமேக ரணங்கள் தீரும் புண்களை ஆற்றும்.
விதைகளின் பொடி புங்கம் விதையிலிருந்து குழித்தைல முறைப்படி எடுக்கப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட அளவு உள்ளுக்கும், மேலும் பூசி வர மேகம், பாண்டு முதலிய நோய்கள் குணமாகும். நரை,திரை,மூப்பு நீங்கி இளமையோடு நீண்ட காலம் வாழலாம். சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு புங்கன் விதைப் பொடியை தேனுடன் கலந்து 1 முதல் 5 அரிசி எடை அளவு கொடுக்க குணம் தரும். இதையே தேள் கடி நஞ்சுக்கும் உண்டால் அவ்விஷம் முறியும். புங்க எண்ணெய் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் புங்கம் எண்ணெய் பூச்சிக்கொல்லி மருந்தாகும்.
குழந்தைகளின், சரும நோய்களுக்கு புங்க எண்ணெய் சிறந்த மருந்து. நாள்பட்ட பழமையான வடுக்கள், தழும்புகள் மறைய அவற்றின் மீது இந்த எண்ணெய்யை பூசினாள் இருந்த இடம் தெரியாமல் மறையும். புங்க பட்டை புங்க பட்டையுடன், ஆலம்பட்டை, பழுத்த அத்தி இலை இவை மூன்றையும் புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் விரைவில் ஆறும். பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர மூல நோய் ஓடி விடும். புங்க காய் புங்க மரத்து காய்களை குழந்தைகளின் இடுப்பில் அரைஞான் கயிற்றோடு சேர்த்து கட்டினால் கக்குவான் இருமல், ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கலாம்.
பயோடீசலாகும் விதை புங்கன் எண்ணெயிலிருந்து தற்பொழுது பயோடீசல் தயார் செய்து வாகனம் மற்றும் ஆயில் இஞ்ஜின்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்த ஆயிலைப் பிரிக்கும் போது கிளசரின் மற்றும் மெத்தனால் கிடைக்கின்றது. இந்த ஆயில் சோப்பு செய்யப் பயன்படுத்தப் படுகிறது. அதன் புண்ணாக்கு பயிர்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்துகிறார்கள். வணிக ரீதியாகவும் புங்கமரம் மிக அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த நமது தேசத்து புங்கை மரத்தின் பயனை உணர்ந்து உலக நாடுகளிலும் வறண்ட பாலைவன தேசங்களில் மிக அதிக அளவில் போட்டியிட்டு பயிரிட தொடங்கி உள்ளனர். இவ்வளவு பழமையான இந்த புங்கை மரம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.
ஓரிரு கிராமங்களில்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்படுவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. காற்றில் உள்ள வெப்பத்தையும்,மாசுவையும் குறைக்கும் குணமுள்ளது புங்கை. இம்மரம் பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். ஒரு புங்கன் மரக்கன்றை வீட்டின் முன்பு நட்டு வளர்க்கலாம். வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காற்று குளிர்காற்றாக மாறும். அதன்மூலம், நம்மை தாக்கும் வெயிலின் உக்கிரம் குறையும்.
இந்த மரத்தின் வேர் கடினப் பாறைகளை,வீட்டு சுவர்களை துளையிடாமல், மண் பகுதிகளுக்குள்ளேயே சுற்றி சுற்றி செல்லும் திறன் கொண்டதால், வீடுகளின் அஸ்திவாரங்களையோ, அல்லது சுவர்களையோ பாதிக்காது. அதனால், வீடுகளுக்கு அருகில் எங்கு வேண்டுமானாலும் இந்த மரத்தை நட்டு வளர்க்கலாம். புங்க மரத்தின் நிழலின் அருமையை பாலைவனப் பிரதேசத்தில் சில காலம் வாழ்ந்த பார்த்த போது தான் உணர்ந்தேன்.
செடிகள் மரங்கள் விற்பனை செய்யும் நர்சரிகளில் இவ்வளவு சிறப்பு மிக்க புங்கை மர கன்றுகள் தீண்டுவதற்கு கூட யாரும் இல்லாமல் வாடி வதங்கி நிற்கின்றன. நாம் அழகு மரங்களை வளர்க்க காட்டும் ஆர்வத்தில் சிறிதாவது இதில் காட்டி. நம் முன்னோர்கள் காத்துக் கொண்டு வந்த இந்த புங்கை மரத்தை நாமும் நம் அடுத்த தலைமுறைக்காக பாதுகாப்போம்.