13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அனந்தவாசுதேவர் கோவிலின் பிரதான வடக்கு கோபுரத்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ளது இந்த சேதமடைந்த திரிவிக்ரம மூர்த்தி. பெரும்பாலான கைகால்கள் காணவில்லை. அவரது வலது கைகள் தாமரை பூவை ஏந்தியுள்ளார் என்பதன் அடையாளமாக அதன் தண்டு இன்னும் இருப்பது தெரியும் அதுமட்டுமின்றி, கௌமோதகி கதையும் பிடித்துள்ளார். மேலும் இடது கைகள் பஞ்சஜன்யாவையும் சுதர்சன சக்கரத்தையும் ஏந்திய வண்ணம் காட்சியளிக்கின்றார்.
பகவான் திரிவிக்கிரமன், வனமாலை அணிந்திருப்பதோடு, மிகுந்த அலங்காரத்துடன் இருக்கிறார். அவரது இடுப்பில் தொங்கும் குஞ்சங்கள் இந்த காலகட்டத்திற்கு பொதுவானது. அதேபோல், பின்புற பலகையில் மகரதோரணம் செதுக்கப்பட்டுள்ளது. உச்சியில் உள்ள கீர்த்திமுகம் இருபுறமும் சங்கு ஊதும் கந்தர்வர்களால் சூழப்பட்டுள்ளது, மற்றும் ஒவ்வொரு மேல் மூலையிலும் ஒரு வித்யாதர ஜோடி செதுக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, ஸ்ரீதேவி (லக்ஷ்மி) மற்றும் சரஸ்வதி தேவியின் இரண்டு சிறிய சிற்பங்கள் திரிவிக்ரமனின் இருபுறமும் நிற்பதைக் காணலாம்.
தூக்கிய கால்களுக்குக் கீழே வாமனன், தோளில் குடையைப் பிடித்துக்கொண்டு மகாபலியை நோக்கி வருவது தெரிகிறது. மேலும், குரு சுக்ராச்சாரியார் விரக்தியில் கைகளை உயர்த்தி பின்னணியில் நிற்கிறார். இந்த பீடம் தாமரை மலர்கள் சூழ்ந்த மெத்தையால் அலங்கரிக்கப்பட்டது போல் செதுக்கப்பட்டுள்ளது.
சிதிலமடைந்தபோதிலும் இவ்வளவு அழகாக இருக்கும் இந்த சிற்பத்தை சிதைக்க அன்னிய படையினருக்கு எப்படிதான் மனம் வந்ததோ.
அமைவிடம்: அனந்த வாசுதேவர் கோவில், புவனேஸ்வர், ஒடிசா மாநிலம்.