தமிழகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் பிறந்து, மலேஷியாவில் மருத்துவராகச் சேவை செய்து, இமயமலை அடிவாரத்தில் ஆசிரமம் அமைத்து, உலகுக்கே ஆன்ம ஒளி காட்டிய மகான், சுவாமி சிவானந்தர்.
'தன்னலமற்ற தொண்டே ஆன்மிக வாழ்வின் அடிப்படை. அதன் மூலம் உள்ளத் தூய்மையும், அதனால் யோகமும், வேதாந்த ஞானமும், இறுதியில் ஆத்ம அனுபூதியும் பெறலாம்' என்று அறிவுறுத்தியது மட்டுமல்லாமல் அப்படியே வாழ்ந்தும் காட்டிய மகான். சிவானந்தரது வாழ்வே அவரது உபதேசம். மனிதநேயம் மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர். 'வாழ்வின் இறுதி நிமிடம் இது' என்று வழி தெரியாமல் நின்றவர்கள்கூட, அவரது வழிகாட்டுதலால் வாழ்க்கையின் உன்னதத்தை அறிந்து மீண்டிருக்கிறார்கள்.
'மனதில் இருக்கும் நோய்கள் நீங்கினால், உடலில் இருக்கும் நோய்கள் தானாக நீங்கிவிடும்' என்பதை உணர்ந்த மருத்துராக சுவாமி விளங்கினார், மனதில் இருக்கும் நோய்களை நீக்கும் மருந்து ஆன்மிகத்தில்தான் இருக்கிறது என்பதையும் தெரிந்தே வைத்திருந்தார். அதன் காரணமாக ஆன்மிக நாட்டம் கொண்டு தாயகத்துக்குத் திரும்பினார். ரிஷிகேசத்தை அடைந்த சிவானந்தர், சுவாமி விஸ்வானந்த சரஸ்வதியை குருவாக ஏற்று, அவரிடம், `சுவாமி சிவானந்த சரஸ்வதி’ என்ற பெயரில் சந்நியாச தீட்சை பெற்றுக்கொண்டார். சந்நியாச ஆசிரமம் மேற்கொண்ட சுவாமி சிவானந்தர், தவத்திலும் தியானத்திலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். ரிஷிகேசத்தில் 'தெய்வ நெறிக்கழகம்' எனும் ஆசிரமத்தைத் தொடங்கி தன்னுடைய கருத்துகளை சொற்பொழிவுகள், புத்தகங்கள், மற்றும் சுற்றுப்பயணங்கள் மூலமாக மக்களிடையே பரப்பி மக்களுக்கு ஆன்மிகத் தொண்டாற்றினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அடிக்கடி ரிஷிகேஷ் சென்று சுவாமிகளை சந்திப்பது வழக்கம். தேவர் மீது சிவானந்தர் அதீத மரியாதை கொண்டிருந்தார்.
தேவர் ஏடு எடுத்து எழுத்தாணி பிடித்து எழுதினால் அடியேன் அதை தலையில் சுமக்க கடமைப்பட்டவன். தேவர் ஒரு ஆன்மீக ஞானக்கடல் என பசும்பொன் தேவருக்கு பட்டம் தந்து போற்றியவர் சுவாமி சிவானந்தர்.
இமயஜோதி என போற்றப்படும் ரிஷிகேஷில் வாழ்ந்த துறவி சிவானந்தரும் பசும்பொன் தேவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம்.