"பராசர மகரிஷியே! நான் கேட்டவண்ணம் பூமி, கடல், நதிகள், கிரகங்கள் முதலியவற்றின் ஸ்வரூபங்களையும் மூன்று உலகமும் ஸ்ரீ விஷ்ணுவையே ஆதாரமாகக் கொண்டு நிலை பெற்றிருப்பதையும் ஞானஸ்வரூபமே முக்கியமானது என்பதையும் நீங்கள் எனக்கு விளக்கியருளினீர்கள்! பரத மாமன்னனது சரிதத்தை பின்னர் அறிவிப்பதாகச் சொன்னீர்கள். அதன்படி இப்போது அதைக் கூறியருளல் வேண்டும். யோகத்துடன் கூடி ஸ்ரீ வாசுதேவனிடத்தில் இதயத்தை நிலை நிறுத்தித் தியானஞ்செய்து கொண்டு சாளக்கிராம க்ஷேத்திரத்தில் வசித்த அந்தப் பரத மகாராஜனுக்கு, ஸ்ரீ ஹரித்தியான பிரபாவத்தாலும், க்ஷேத்திர மகிமையினாலும் மோட்சமுண்டாகாமல், மறுபடி பிராமண ஜன்மம் எப்படி ஏற்பட்டது? அவர் அந்தப் பிராமணப் பிறவியில் என்ன செய்தார்? அந்த விஷயங்களை நீங்கள் எனக்குத் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார் மைத்ரேயர். உடனே பராசரர் கூறலானார்.
"மைத்ரேயரே! அந்தப் பரத மகாராசன் எம்பெருமானது திருவடிகளையே தியானஞ் செய்துகொண்டு சாளக்கிராமத்திலேயே பலகாலம் வசித்து வந்தார். அவர் மகா குணவான், மிகவும் உத்தமர். அவர் சொப்பனம் மத்தியம் உள்பட சகல அவஸ்தைகளிலும் 'யக்ஞேச, அச்சுத கோவிந்த, மாதவ, அநந்த, கேசவ, விஷ்ணோ ஹ்ருஷிகேசா வாசுதேவா, உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்!' என்பதை உச்சரித்துக் கொண்டிருந்தாரேயல்லாது வேறொன்றையும் உச்சரிக்கவில்லை. வைதிக கிரியைகளை நடத்துவதற்காக சமித்து, புஷ்பம் தருப்பை முதலியவற்றைச் சேகரிப்பது போன்ற செயல்களைத் தவிர வேறெதையுஞ் செய்ததில்லை.
இவ்விதமாகப் பரதர் பற்றில்லாமல் யோக தவம் செய்து வரும் போது, ஒருநாள் மகாநதியில் நீராடிச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து கொண்டிருந்தார். அங்கே கருவுயிர்க்கும் தருணமுடைய மான் ஒன்று, தன்னந்தனியாகத் தண்ணீர் குடிக்க வந்தது. அது நீர் அருந்திக் கொண்டிருக்கும்போது, அதிபயங்கரமான சிங்கத்தின் கர்ஜனைக்குரல் கேட்டது. அந்தக் கர்ஜனையைக் கேட்ட மான் மிகவும் பயந்து திகைத்துப் பரபரப்புடன் நதியின் உயர்ந்த கரை மீது ஏறிச் சென்றது. அப்போது அதன் கர்ப்பமானது கீழேயிருந்த நதி நீரில் விழுந்து அலைகளிலே மிதந்தது.
பரதர் அந்த மான் குட்டியைக் கண்டு இரக்கங்கொண்டு, அதைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். இது இப்படியிருக்க அந்தமான், கருப்பம் விழுந்த அதிர்ச்சியினாலும் மிக உயரத்தில் ஏறிய வருத்தத்தாலும் கீழே விழுந்து இறந்தது. தாய்மாமன் இறந்ததும் அதன் சின்னஞ்சிறு மான்குட்டி அந்தரமாக இருப்பதையுங்கண்ட பரதயோகி மிகவும் இரக்கங்கொண்டு, அந்தக் குட்டியை எடுத்துக் கொண்டு தமது ஆசிரமம் சேர்ந்தார்."
"பிறகு, அவர் மான் குட்டியை வெகு அன்புடனே வளர்த்து வந்தார். ஆசிரமத்தின் அருகாமையில் இருந்த இளம்புற்களை மேய்ந்து கொண்டும், புலியைக் கண்டால் பயந்து ஆசிரமத்துக்கு ஓடி வந்து ஒளிந்து கொண்டும் காலையில் புறப்பட்டு மேய்ந்து விட்டு, மாலையில் ஆசிரமத்திற்குத் திரும்பிவந்து தங்கிக்கொண்டும் இருந்தது. இவ்விதமாக அந்த மான் ஓடி விளையாடுவதைக் கண்ட பரதரின் மனம், அதனிடத்தில் பற்றும் பாசமும் கொள்ளலாயிற்று. ராஜ்யம், மக்கள் முதலிய பந்த பாசங்களை விட்டு, யோக நிஷ்டையிலிருந்த அந்த முனிவர் மான் மீது மிகவும் அபிமானம் கொண்டிருந்தார்.
அதைச் சிறிது நேரம் காணவிட்டாலுங்கூட, 'ஐயோ நம்முடைய மான்குட்டியைக் காணவில்லையே? அதைச் செந்நாய் தின்றதோ, புலியறைந்ததோ, இன்னமும் வரவில்லையே? என்ன செய்வேன்? என்று வருந்துவார் அந்த மான் விளையாடிய இடங்களில் அதன் சிறு குளம்புகளில் பெயர்க்கப்பட்ட மேடு பள்ளமான இடத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவேன்? அப்படிப்பட்ட என்னுடைய மான் குட்டி எங்கே போயிற்றே தெரியவில்லையே! அது என்னருகே வந்து, தனது கொம்பினால் என்னுடம்பை உரசி, சுகம் உண்டாக்குமோ? அது க்ஷேமமாய் இங்கே திரும்பி வந்து சேர்ந்து சுகத்தை உண்டாக்குமோ இங்கு வராமல் துன்பத்தை உண்டாக்குமோ? என்ன செய்வேன்? இப்போதுதான் முளைத்த தனது சிறுபற்களால் கடித்த தருப்பைப் புற்களும் நாணல்களும் சாமவேதிகளான பிரமச்சாரிகளைப் போல் மொட்டையாகத் தோன்றுகின்றனவே? இவ்வாறு அது மறுபடியும் வந்து மேயக் காண்பேனோ?' என்று பரத மகரிஷி வருந்துவதும், அது வந்ததும் பெருமகிழ்ச்சி அடைவதுமாக இருந்தார். இவ்வாறு அந்த மான் குட்டியின் மீது அன்பு பாராட்டி வந்ததால், ராஜ்ய போகாதிகளைத் துறந்த அவருக்கும் சமாதி நிஷ்டை கலைந்தது. இந்நிலையில் அவருக்கு மரண காலமும் நெருங்கியது."
"அப்போது, தந்தையை அவனது அன்பு மகன் நோக்குவதைப் போல, அந்த மான்குட்டியானது கண்ணில் கண்ணீர் ததும்ப நோக்கிக் கொண்டிருந்தது. அதுபோலவே, பிரியமான மகனைத் தந்தை பார்ப்பது போல பரதரும் கண்ணீர் ததும்ப மான்குட்டியைப் பார்த்துக் கொண்டே பிராணனை விட்டார். அதனால் மறுபிறவியில் அவர், கங்கைக் கரையில் ஒரு மானாகப் பிறந்தார். ஆயினும் தனது யோகச் சிறப்பினால் பூர்வ ஜன்ம ஞானமுடையவராக இருந்தார். அதனால் வெறுப்புற்றுத் தன் தாயைப் பிரிந்து முன்பிருந்த சாலக்கிராம க்ஷேத்திரத்தை அடைந்து, அங்குள்ள உலர்ந்த புற்களையும், சருகுகளையும் தின்று, மானாகப் பிறக்க ஹேதுவான கர்மங்களைக் கழித்து, அங்கேயே மரணமடைந்தார்.
பிறகு, அந்த ஊரிலேயே, நல்ல ஒழுக்கமும் யோக நிஷ்டையும் மிகுந்த உத்தமமான பிராமணர் குலத்திலே பூர்வ ஜன்ம ஸ்மரணையோடு பிறந்தார். பூர்வஞானம் தோன்றியதால், முன்பு போலவே சகல சாஸ்திரங்களின் உண்மையை உணர்ந்தவராய் எல்லாவிதமான ஞானத்திலும் தேர்ச்சி பெற்றவராய், ஆத்ம சொரூபத்தைப் பிரகிருதிக்கு வேறாகவும், தேவாதி சகல சரீரங்களிலும் உள்ள ஆத்ம ஸ்வரூபம் யாவும் தம்மைவிடப் பேதமில்லாமல், விலக்ஷணமான ஞானகாரமுள்ளவையாகப் பாவித்து வந்தார். வேத சாஸ்திரங்களைக் கற்றுத்தேர்ந்தார். அவர் ஆத்மஞானியாக இருந்ததால் எந்தவொரு கர்மத்தையும் செய்யவில்லை, மேலும், அழுக்கு நிறைந்த உடம்போடும், அழுக்கேறிய கந்தை ஆடைகளோடும், ஊத்தைப் பல்லோடும், கண்டோர் அருவருத்து, அவமதிக்கும்படி நடந்து வந்தார்.
உலகோர் செய்யும் வெகு மதிப்பானது, யாக சம்பத்துக்கு மிகுந்த கேட்டை விளைவிக்கும். அவமதிப்போ, கர்வ அகங்காரங்களைப் போக்குவதால் யோக சித்தியைத் தருவதாகும். ஆகையால் யோகியானவன், யாவரும் தன்னிடம் சேராமல், தன்னை அவமானம் செய்யும்படி ஜடனைப் போலக் காட்டிப் பெரியோருடைய ஒழுக்கத்திற்குப் பழுதுவராமல் காத்து நடக்கவேண்டும்! என்று இரணிய கர்ப்பவாக்கியங்களை நினைத்து அந்தப் பிராமணர் வித்துவானாக இருந்தும் மூடனைப் போலவும் பித்தனைப் போலவும் திரிந்து கொண்டிருந்தார். இவ்விதமாக அவர் இருந்ததால், அவருக்கு ஜடபரதர் என்ற பெயர் வழங்கலாயிற்று."
"புழுத்துக் கெட்டுப்போன உழுந்து, யவதானியம் முதலியவற்றால் செய்த அப்பங்களையோ, கீரையையோ காட்டுக் கிழங்குகளையோ ஏதாவது ஒன்றை அவர் தின்று பிராணதரணை செய்து வந்தார். இந்நிலையில் அவரது தந்தை இறந்தார். அவருடைய தம்பியரும், அண்ணன்மார்களும் மற்றுமுள்ள பந்துக்களும், அற்ப ஆகாரம் கொடுத்து, அவரைக் கொண்டு கழனி வேலையைச் செய்வித்து வந்தார்கள். அவர் அந்த வேலையைக் கூடத் திருத்தமாக செய்யாமல் மூடனைப் போலச் செய்து வந்தார். அவர், இதுபோன்று அற்ப ஆகாரத்தைப் புசித்து வந்தாலும் அவர் உடல் நன்றாகப் பருத்தும் கண்கள் இரண்டும் வித்தியாசமில்லாமல் சமமாக விளங்கவே தோற்றத்தில் மாற்றமின்றி இருந்து வந்தார்.
அவரது உறவினரும் ஊராரும் கூலி கொடுக்காமல், சிறிது ஆகாரத்தை அவருக்குக் கொடுத்து வேலை வாங்கி வந்தார்கள். அவர்கள் எந்த வேலையைச் செய்யச் சொன்னாலும் ஜடபரதர் அந்த வேலையைத் தடையின்றிச் செய்தார். முன்பு சொன்னதுபோல், அழுக்குத் தீர்ப்பது போன்ற செய்கைகள் ஒன்றுமில்லாமல், சிகை, யக்ஞோபவீதம் முதலிய பிராமணக் குறிகளும், நீராடல் சந்தியாவந்தனம் செய்தல் முதலிய பிராமணச் செயல்கள் மட்டுமே உடையவராய், பித்தனைப் போலவே ஜடபரதர் திரிந்து வந்தார்.
இந்நிலையில், சவ்வீர ராஜனுடைய சாரதியானவன் அவரைக் காளிக்கு நரபலியிட நிச்சயித்து, இரவில் அவரைப் பிடித்துக் கொண்டு சென்றான். பலியிடுவதற்குரிய அலங்காரங்களையெல்லாம் அவருக்குச் செய்து, காளியின் திருக்கோயிலின் எதிரே, கொலை செய்யும் இடத்தில் கொண்டு நிறுத்தினான். அந்தக் காளியானவள். அவர் மகாயோகி என்பதையறிந்து, அவரைப் பலியிட வந்த அந்தக் கொடியவனையே, தன் கத்தியினால் வெட்டி, அவனது கழுத்திலிருந்து ஒழுகிய ரத்தத்தை தன் பரிவாரத்துடன் கூடச்சேர்ந்து குடித்து மகிழ்ந்தாள்."
"பிறகு ஒருநாள், சவ்வீர ராஜனுடைய சேவகன் ஒருவன் ஜடபரதரைப் பிடித்துக்கொண்டு சென்றான். ஜடபரதரை, அரசனது சிவிகையைச் சுமப்பதற்குத் தகுந்த சிவியானாக நினைத்து, அமிஞ்சி பிடித்துப் போட்டான். ஒருநாள் அரசன், இஷிமதி நதி தீரத்தில் இருந்த கபில மகாமுனிரைக் காண்பதற்கு விரும்பினான். 'துக்கமயமான சம்சாரத்தில் எது உயர்ந்தது?' என்பதை அந்த முனிவரிடமிருந்து தெரிந்து கொள்ள அரசன் விரும்பினான். எனவே அவன் பயணப்பட்டான். அவ்வரசனுடைய பல்லக்குப் போயிகளாக அமிஞ்சி பிடித்துப் போட்டிருந்த ஆட்களிலே ஜடபரதரும் சேர்ந்திருந்தார். சகல ஞானமும் உணர்ந்தவராக அவர் இருந்தாலும் கூட, தமது முற்பிறவிப் பாவங்களைத் தொலைக்க, அவர் பல்லக்கை சுமந்து சென்று கொண்டிருந்தார்.
அப்படிப் போகும் போது, நுகத்தடியளவு தூரம் ஜந்து வொன்றும் இல்லாபடித் தரையைப் பார்த்துக்கொண்டே அவர் மெதுவாக நடந்து சென்றார். மற்றவர்கள் துரிதமாக நடந்தனர். பல்லக்கின் வேகம் குறைந்தது. அதனால் சிவிகையில் இருந்த அரசன் 'சரியாய் நடங்கள்!' என்று சிவிகை யாரை அதட்டினான். அவன் அப்படி அதட்டியும் பல்லக்கின் வேகம் குறைந்ததால், அரசன் மிகவும் கோபத்துடன் 'சிவியாரே! என் பேச்சையுங் கடந்து ஏனிப்படி நடக்கிறீர்கள்?' என்று பலமுறைகள் கூவினான். அதற்கு சிவியாட்கள், 'மகாராஜா! எங்களின் குற்றமில்லை. இவன்தான் இப்படி நடக்கிறான்' என்று ஜடபரதரைக் குற்றம் சாட்டினார்கள். அதைக்கேட்ட அரசன், 'அடா! என் பல்லக்கைச் சிறிது தூரந்தானே நீ சுமந்திருக்கிறாய்! இதனாலேயே விடாய்த்துப் போய்விட்டாயே! மேலும் நீ வருத்தத்தை! சகிக்க மாட்டாதவனோ! பிரத்யக்ஷத்தில் நீ பருத்தவனாகவே காணப்படுகிறாயே!' என்று கேட்டான். அதற்கு ஜடபரதர், 'அரசே! நான் பருத்தவனும் அல்ல. உனது பல்லக்கை நான் சுமக்கவும் இல்லை. அதற்காக நான் வருந்தவும் இல்லை. அதனால் நான் ஆயாசமும் அடையவில்லை!' என்றார்.
அதைக் கேட்ட அரசன், அவரது கருத்தைப் புரிந்துகொள்ளாமல் 'பார்வையில் நீ பருமனாகத்தானே தோன்றுகிறாய்? இப்போது உனது தோளில் என் பல்லக்கு இருக்கிறது. சுமை சுமந்தால் எந்தப் பிராணிக்கும் களைப்பு ஏற்படும் என்பது நிச்சயமாக இருக்க நீ ஏன் பொய் சொல்கிறாய்?' என்று கேட்டான். அதற்கு ஜடபரதப் பிராமணர், 'அரசே! நீ என்னவோ பிரத்யக்ஷமாய்க் கண்டேன் என்று சொன்னாயே அந்த வஸ்துவை முன்னே நான் அறியச் சொல்வாயாக அது பலம் உள்ளது என்பதையும் இல்லாதது என்பதையும் பற்றிப் பிறகு பேசலாம். மேலும் என்னாலே சிவிகை சுமக்கப்பட்டது. அது இப்போதும் என்மேல் இருக்கிறது என்று சொன்னாயல்லவா? இது சுத்தப்பொய். அதைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக? நிலத்திலே இரண்டு பாதங்கள் இருக்கின்றன. அவற்றின்மேல் கணைக்கால்கள் இருக்கின்றன. அவற்றிலே தொடைகள் இரண்டும் நிற்கின்றன.
அவற்றை ஆதாரமாகப் பற்றி நிற்கிறது. வயிறு, மார்பு, கைகள், தோள்கள் இவையனைத்தும் வயிற்றின் மேல் இருக்கின்றன. இந்தத் தோளின் மீது படிந்திருப்பது சிவிகை இப்படியிருக்க எனக்கு ஏது பாரம்? அந்தச் சிவிகையிலே நீ என்று உன்னால் நினைக்கப்பட்ட தேகம் இருக்கிறது. அந்தத் தேகத்தில் நீ இருக்கிறாய். அதுபோலவே, இந்த தேகத்தில் நான் இருக்கிறேன். அரசே! நீயும் நானும் தேகங்களாய் மாறி நிற்கிற மற்றவரும் பிருத்வி முதலிய பஞ்சபூதங்களாலே சுமக்கப்படுகிறோம். இந்தப் பூதவர்க்கமும் குணங்களின் வெள்ளத்திலே வீழ்ந்து, அதன் வசத்தால் நடத்தல் முதலிய செயல்களைச் செய்கின்றன. சத்துவம் முதலான குணங்கள் கருமங்களுக்கு வசப்பட்டிருக்கின்றன. அந்தக் கருமங்கள் அவித்தையினாலே சம்பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வவித்தை சகல பிராணிகளிலும் இருக்கின்றது.
ஆத்மாவோ சுத்தமாய், நாசமில்லாததாய், பசி முதலியவைகள் இல்லாததாய் சத்துவாதி குணரகிதமாய், குணமயமான பிரகிருதியைக் காட்டிலும் வேறானதாக இருக்கிறது. அது சகல ஜந்துக்களிலும் தேகம்போல் அநேக அம்சமாய் இராமல் ஒரே அம்சமாக இருக்கிறது. அது வளர்வதுமில்லை; தேய்வதுமில்லை. இப்படியாக ஆன்மாவுக்கு விருத்தியோ தேய்வோ இல்லாமலிருக்க, நான் பருத்திருக்கிறேன் என்று எந்த யுக்தியினாலே சொன்னாய்? அன்றியும் பூமி, பாதம், கணைக்கால், தொடை, இடை முதலான உறுப்புகளின் அடுக்கின் மேலுள்ள தோளில் இருக்கும் பல்லக்கினால் எனக்குப் பாரம் உண்டென்றால் அந்தப் பாரம் உனக்கும் சமமாக இருக்க வேண்டும்.
மேலும் சகலமான பேருக்கும் இந்தப் பல்லக்கின் பாரம் மட்டுமல்ல, காடு, மலை, வீடு முதலானவற்றைப் பற்றிய பாரமும் உண்டென்றே சொல்ல வேண்டும். இப்படியின்றி, ஆன்மாவானது பிராகிருதங்களான அவயவங்களைவிட வேறு என்பது சித்தப்படும்போது, நான் பாரத்தைச் சுமக்கிறேன் என்பது ஏது? இந்தப் பல்லக்கு எந்தப் பொருளால் ஆனதோ, அந்தப் பொருளால் ஆனது தான் இந்த உடம்புமாகும். இதில் தான் எனக்கும் மற்றவருக்கும் மமத்துவம்! எனது என்ற அபிமானம் உள்ளது!' என்று சொல்லி விட்டுப் பல்லக்கைச் சுமந்து கொண்டு சென்றார்.
"இதைக் கேட்டவுடன் அரசன் திடுக்கிட்டு சிவிகையிலிருந்து கீழே இறங்கி ஜடபரத யோகியாரின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, 'ஐயா! அடியேன் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்தருள வேண்டும். தேவரீர் ஜடனைப்போல ரூபந்தரித்துள்ளீர். தேவரீர் யார் என்றே தெரியவில்லை. என்ன காரணத்தினால் என்ன பயனைக் கருதி இங்கே எழுந்தருளினீர்கள் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்!' என்றான். 'அரசே! நீ யார் என்று என்னைக் கேட்டாயல்லவா? அதற்கு நான் இன்னார் என்று விடையளிக்க முடியவில்லையே! எப்பயனை கருதி எதனால் இங்கே வந்தாய் என்பதற்குப் பதில் சொல்ல வேண்டுவதில்லை. எங்கும் வருவதற்குப் பயன் அனுபவமே. இந்தச் சுகதுக்க அனுபவங்கள். புண்ணிய பாவங்களால் உண்டானவைகளாய். இடத்தையும் காலத்தையும் பற்றியிருப்பதால் ஜீவன்கள் தனது கர்மானுபவத்திற்கு உரியதேச காலங்களிலே தேகாதிகளைப் பெற்று வருகின்றனர்' என்றார் ஜடபரதர்.
"'யோகியாரே! சகல காரியங்களுக்கும் தருமா தருமங்களும் காரணம் என்பதும் சுகதுக்க அனுபவித்திற்காகத் தேகம் பிரவேசிப்பது என்பது சரிதான். ஆனால் நான் இன்னார் என்று ஆன்மாவைக் குறித்துச் சொல்லக்கூடாது என்று கூறினீர்களே? அதையறிய விரும்புகிறேன் ஆத்மா என்பது இல்லாத பொருள். ஆகையால் அப்படிச் சொல்லக்கூடாது என்றால் ஆத்மா இருக்கிற வஸ்துவேயல்லாமல் இல்லாததன்றே இந்த நான் என்னும் சொல் ஆன்மாவின்மேல் பிரயோகிப்பது குற்றம் அல்லவே? இப்படியிருக்க நான் இன்னான் என்று சொல்ல முடியாது என்று நீங்கள் எப்படிச் சொன்னீர்கள்?' என்று அரசன் கேட்டான். 'அரசே! ஆன்மாவைக் குறித்து நான் என்னும் சொல்லைப் பிரயோகிப்பது குற்றமல்ல. அதுவும் சரிதான். ஆனால் நான் இன்னான் என்பதனால் ஆத்மாவல்லாத தேகாதிகளிலே ஆத்மபுத்தியும், இப்படிப்பட்ட பிராந்தியைத் தெரிவிக்கும் சொல்லாவதும் ஆகிய குற்றங்கள் உண்டாம்.
அரசே! நான் என்று சொல்வது எது? நாக்கும், உதடுகளும், பற்களும், தாழ்களும் தான். நான் என்று சொல்கின்றன என்று நினைக்கிறாயே, அவைகள் அனைத்தும் கருவிகளேயல்லாமல் கர்த்தாவான ஆத்மாவன்று, தேகத்தைக் காட்டிலும் வேறானது. ஞானமே வடிவாகக் கொண்ட நான் என்னும் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறான வடிவுள்ள ஆத்ம ஸ்வரூபம் ஒன்று இருக்குமானால் என்னை இன்னான் என்று சொல்லலாம். அப்படித்தான் இல்லையே? ஆன்மா நித்தியப்பொருள்.
உடல் முதலியவை அநித்தியப் பொருள்கள். ஆகையால் அரசனாகிய நீயும் இந்தச் சிவிகையைச் சுமக்கின்ற நாங்களும் எல்லாமே இருக்கும் பொருளல்ல. எப்படியெனில் முன்பு மரமாக இருந்தது வெட்டப்பட்டு கட்டையாயிற்று. பிறகு அது நீ ஏறியிருக்கிற பல்லக்கு ஆயிற்று. இந்த நிலையில் அதற்கு மரம் என்றோ கட்டை என்றோ பெயர்களில்லை! மகாராஜா மரத்தின்மேல் ஏறியிருக்கிறார் என்று இவர்களே சொல்வார்களா? அல்லது கட்டையின் மேல் இருக்கிறார் என்றுதான் சொல்வார்களா? சிவிகையில் இருக்கிறார் என்றுதானே சொல்வார்கள்? இதனை ஆராய்ந்தால் சிவிகை என்பது ஒருவகை ஜோடிப்பே ஆகும். அதாவது கட்டைகள் அடுக்கப்பட்ட ஜோடிப்பு. இந்த ஜோடிப்பைப் பிரித்துவிட்டுப் பிறகு பல்லக்கு எங்கே என்பதை தேடிப்பார்.
அதுபோலவே சலாகை முதலியவற்றைப் பிரித்துக் குடையைத் தேடிப்பார். இந்த நியாயத்தாலேயே, இன்னார், நான் இன்னார் எப்படி என்பது தெரியும், கர்மவசத்தால் உண்டாகியிருக்கிற தேகங்களிலே புருஷன் என்றும் ஸ்திரீ என்றும், மாடென்றும், ஆடென்றும், யானையென்றும், குதிரையென்றும், மரம் என்றும் கொடி என்றும் வழங்கப்படுகின்றன. நீ, நான் என்கிற சொற்களின் முக்கியப் பொருளான ஆன்ம சொரூபமானது ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல, தேவனுமல்ல, மனிதனுமல்ல, மிருகமுமல்ல, மரமுமல்ல. இத்தேவத்துவலதி தர்மங்கள் எல்லாம் கர்மத்தினால் வந்த சரீரரத்தின் ரூபபேதங்களேயாகும்.
அரசே! நீ உலகத்தாருக்கு அரசன்! தகப்பனுக்கு மகன்! பகைவனுக்கு பகைவன்! மனைவிக்கு மணாளன்! மகனுக்குப் பிதா! இப்படடியிருக்க உன்னை யார் என்று நான் சொல்வேன். மேலும் நீ என்ன சிரசா, கழுத்தா, வயிறா? இந்த உடம்புக்கு நீ யார்? உனக்கு இந்த உடல்யாது? இவ்விதமாய்ச் சகல உறுப்புகளுக்கும் வேறாய் இருக்கிற நீயே நன்றாக ஆலோசித்து நான் யார் என்று சிந்தித்துக்கொள். உண்மை இப்படியிருக்க என்னை நான் இன்னான்! என்று வேறுபடுத்தி எப்படிச் சொல்லமுடியும்?' என்று ஜடபரதர் விளக்கினார்.
Credit: Mahabaratham and Ramayanam