பஜனைப் பாடகருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை, இராமபிரான் 14 ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்தார். பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசம் செய்தனர். பத்ராசலம் ராமதாசர் 12 ஆண்டுகள் சிறையில் வாடி வதங்கினார். இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என்று உயிர்விட எண்ணிய நிலையில் ராமனும், லட்சுமணனும் மாறுவேடத்தில் வந்து உதவிய அதிசயம் நடந்தது. மஹாராஷ்டிரத்தில் சமர்த்த ராமதாசர், பஞ்சாபில் சுவாமி இராம தீர்த்தர், கேரளத்தில் சுவாமி ராமதாஸ் என்று பல சாது சந்யாசிகள் இராமன் பெயரில் வாழ்ந்தனர். இவர்களில் பத்ராசலம் ராமதாசர் (1620 – 1680) ஆந்திரப் பிரதேசத்தில் கோல்கொண்டா, பத்ராசலம் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர் ஆவார்.
லிங்கண்ணா என்ற பிராமணருக்கு புத்திரனாக அவதரித்த ராமதாசரின் உண்மைப் பெயர் கோபண்ணா. அவர் கமலம்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு பஜனைப் பாடல்கள் பாடிக், காலம் கழித்து வந்தார். இவருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவில் கபீர்தாசர் என்ற புனிதர் வாழ்ந்து வந்தார். ராமதாசர் கனவில் வந்த கபீர்தாசர் அவருக்கு இராம நாமத்தை உபதேசம் செய்து இராமனை பிடித்துக் கொள் என்று அருளுரை பகன்றார். அவ்வாறே கோபண்ணாவும் செயல்பட்டார். கோபண்ணாவுக்கு இராமதாசர் என்று பெயர் சூட்டியதும் கபீர்தாசர் தான்.
ஒரு சமயம், ராமதாசர் வீட்டில் பெரிய விருந்து நடந்தது. அப்போது அவர்களுடைய குழந்தை தாய் தந்தையரை விட்டுச் சென்று சமையல் அறையில் இருந்த கஞ்சித் தொட்டியில் விழுந்து மூழ்கியது. குழந்தை இறந்ததை அறிந்தும், விருந்து கெடக் கூடாதென்பதற்காக தாயார் யாருக்கும் தெரியாமல் மரணத்தை மறைத்து வைத்தார். எல்லோரும் வெளியே சென்றவுடன் துக்கம் வெடித்தது. ஓவென்று கதறி அழுதார். ராமதாசருக்கும் நிலைமை புரிந்தது. குழந்தையின் சடலத்தை இராம பிரான் விக்கிரகத்தின் முன்னால் கிடத்தி மனம் உருகப் பிரார்த்தித்தனர். அதிசயம் நடந்தது.
தூக்கத்தில் விழித்தெழுந்த குழந்தை போல அந்தக் குழந்தை உயிருடன் திரும்பி வந்தது. ராமதாசர், அவரிடமிருந்த பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதில் செலவழித்தார். வறுமையின் எல்லைக் கோட்டைத் தாண்டியபோது வயிறு காயத் துவங்கியது. இராமனே வந்து உதவுவார் என்று காத்திருந்தார். ‘’முயற்சி திருவினை ஆக்கும்’’ என்பதை மனைவி நினைவுபடுத்தினார். உடனே ஹைதராபாத்தில் இருந்து ஆட்சி புரிந்த தானிஷா (1674-1699) என்ற முஸ்லீம் மன்னரை அணுகினார். அவரிடம் மாடண்ணா, அக்கண்ணா என்ற இரண்டு பிராமண அமைச்சர்கள் இருந்தனர். அவர்கள் ராமதாசுக்கு சொந்தக்கார்கள். அவர்கள் மூலமாக பத்ராசலத்தில் தாசில்தார் பதவி கிடைத்தது. அரசாங்கத்துக்கான வரிப் பணத்தை வசூலித்து ஹைதாராபாத்துக்கு அனுப்பவேண்டியது இவர் பொறுப்பு.
பக்தி முற்றிய நிலையில், மாணிக்கவாசகரைப் போல, இவரும் அரசாங்க பணத்தை கோவில் கட்டப் பயன்படுத்தினார். பத்ராசலம் இராமர் கோவிலுக்கு எல்லா வசதிகளையும் செய்து சுவாமிக்கு நகை, நட்டுக்களையும் வாங்கினார். பெரிய ஒரு தொகையை மன்னருக்கு பாக்கி வைத்தார். உண்மை நிலையை அறிந்த மன்னன் தானிஷா, ராமதாசருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். ராமதாசர் 12 ஆண்டுக் காலம் சிறையில் வாடி வதங்கினார்.
மாணிக்கவாசகர் போலவே அரசாங்க ஊழியரின் சித்திரவதைக்குள்ளானார். பக்தரின் கோரிக்கையை நிறைவேற்ற எண்ணிய இராமபிரான், தனது தம்பி லெட்சுமணனையும் அழைத்துக் கொண்டு பூமிக்கு இறங்கிவந்தார். ஒரு ரெவின்யூ அதிகாரியின் சேவகர்கள் போல வேஷம் போட்டுக் கொண்டு பெரிய தொகையை எடுத்துக் கொண்டு மன்னர் தானிஷா அரண்மனைக்கு வந்து கதவைத் தட்டினர். அர்த்த ராத்ரியில் இருவர் வந்தவுடன் அந்தப்புரப் பெண்களை அனுப்பிவிட்டு சேதி என்ன என்று கேட்டார். ரெவின்யூ அதிகாரி, ராமதாசர் பாக்கி செலுத்தவேண்டிய பெருந்தொகையை கொடுத்து அனுப்பியதாகச் சொன்னார்கள்.
பணத்தைக் கொடுத்துவிட்டு அத்தாட்சிப் பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கினர் ராம லெட்சுமணர். உடனே ராமதாசரை விடுதலை செய்யவும் வேண்டினர். ராமதாசர் விடுதலை செய்யப்பட்டவுடன் நடந்த அதிசயத்தை அறிந்தார். தானிஷாவுக்கு தரிசனம் கொடுத்தனையே, எனக்கு தரிசனம் தரவில்லையே என்று ஒரு தெலுங்கு கீர்த்தனையும் பாடினார். தானிஷாவுக்கு ஒரே மகிழ்ச்சி. முஸ்லீம் மன்னராக இருந்தபோதிலும் கோவில்களுக்கு வாரி வழங்கிய மன்னர்களில் இவரும் ஒருவர்.
அவருடைய மன்னர்களில் இருவர் பிராமணர்கள். பின்னர் ராமதாசருக்கும் இராமபிரான் தரிசனம் கொடுத்தார். இராமதாசர் பாடிய நூற்றுக் கணக்கான தெலுங்கு கீர்த்தனைகள் தமிழ்நாட்டிலும், ஆந்திரத்திலும் இன்னிசைக் கச்சேரிகளில் இன்றும் பாடப்படுகின்றன. அவருடைய கீர்த்தனைகளில், “இராமா, நீ நாமம் ஏமி ருசிரா, எந்த ருசிரா" என்ற பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல் ஆகும். இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி.
Credit: ஸ்ரீ மஹா பக்த விஜயம்