உதவும் உள்ளம்

வாழ்க்கை பற்றிய புதிர்கள் ஏராளம் உள்ளன. அதில் ஒன்று மகிழ்ச்சியைத் தேடி மனிதனின் நீண்ட போராட்டம்.


ஏழை, பணக்காரன், அதிகாரம் படைத்தவர், பாமரன்,அறிவாளி என எத்தனை விதமானவர்களை அழைத்து வந்தாலும், அவர்களுக்குள் எவ்வளவு வேறுபாடுகள் இருப்பினும், மகிழ்ச்சியை அவர்கள் தேடி அலைவது மட்டும் ஒரே பொதுக்காரணியாக இருந்து வருகிறது.


வாழ்க்கையின் அழகு என்பது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை. உங்களால் அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதிலே தான் இருக்கிறது.


மகிழ்ச்சி என்பது போய் சேரும் இடம் அல்ல. அது ஒரு பயணம்.


மகிழ்ச்சி என்பது எதிர்காலம் இல்லை. அது நிகழ்காலம்.


மகிழ்ச்சி என்பது ஏற்றுக் கொள்வது அல்ல. அது ஒரு முடிவு.


ஒரு அழகான பெரிய பணக்காரி அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு மனநல மருத்துவரிடம் சென்றாள்.


அவரிடம் "என் வாழ்வு ஒரே வெற்றிடமாக இருக்கிறது. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாகவே உணருகின்றேன்.


பொருள், இலக்கு என்றில்லாமல் வாழ்க்கை போய்க் கொண்டு இருக்கிறது. என்னிடம் அளவு கடந்த பணமும், சொத்தும் எல்லாம் இருக்கிறது. இல்லாதது அமைதியும், மகிழ்ச்சியும் மட்டுமே. என் மகிழ்ச்சிக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்றாள்.


"மருத்துவர் அவரின் அலுவலகத்தில் தரையை கூட்டிக் கொண்டிருந்த ஒரு பணிப்பெண்ணை அழைத்தார்.


அந்த பணக்காரப் பெண்ணிடம், "நான் இப்பொழுது பணிப்பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது" என்று சொல்லச் சொல்கிறேன். நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் அவர் பேசுவதை மட்டும் கேளுங்கள் என்றார்.


பணிப்பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்லத் தொடங்கினாள்.


"என் கணவர் இறந்த மூன்றாவது மாதம், என் ஒரே மகன் விபத்தில் இறந்து போனார். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை, என்னால் உறங்க இயலவில்லை, உண்ண முடியவில்லை, யாரிடமும் சிரிக்க முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.


இப்படி இருக்கையில் ஒருநாள் நான் வேலை முடிந்து வரும் போது ஒரு பூனை என்னைப் பின் தொடர்ந்தது.


வெளியே மழை பெய்து கொண்டு இருந்தது. எனக்குப் பூனையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வரச் செய்தேன்.


நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனைப் பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக் கொடுத்தது.


கடந்து போன மூன்று மாதத்தில் நான் முதல் முதலாகப் புன்னகைத்தேன். நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு செயல் என்னை மகிழ்ச்சி அடையச் செய்கிறது எனில், ஏன் இதைப் பலருக்கு செய்து நான் ஏன் மனநிலையை மாற்றிக் கொள்ளக் கூடாது என ஆலோசித்தேன்.


அடுத்த நாள் நோய் வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன்.


இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி, அவர்கள் மகிழ, நானும் பெருமகிழ்வுற்றேன்.


இன்று என்னை விட மனநிறைவாக உறங்கவும், உணவை உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே ஐயப்பாடுதான்.


மகிழ்ச்சி என்பது, அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை இந்த செயல்கள் மூலமாகக் கண்டு கொண்டேன்.


இதைக் கேட்ட அந்தப் பணக்காரப் பெண் ஓலமிட்டு அழுதாள். அவளிடம் பணத்தைக் கொண்டு வாங்கக் கூடிய எல்லாம் இருந்தது. ஆனால், பணத்தால் வாங்க முடியாத மகிழ்ச்சி மட்டும் அவளிடம் இல்லை.


ஆம் நண்பர்களே...!


வாழ்க்கையில் எல்லோரும் மகிழ்ச்சியைத் தேடுகிறோம், ஆனால், அது எங்கே? எப்படி? எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை.


மரங்கள் கனிகளைத் தருவது போல, தங்களிடம் உள்ளதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும். நம் மகிழ்ச்சி அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.


அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சி கொடுங்கள், உங்கள் மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும். "பிறரை மகிழ வைத்து நாம் மகிழ வேண்டும். உலகம் உங்களைக் கண்டு மகிழும்" உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்கும்.

More like this

Leave a Reply

Error message here!

Show Error message here!

Forgot your password?

Show Error message here!

Lost your password? Please enter your email address. You will receive a link to create a new password.

Back to log-in

Close