புத்தர் தியானத்திற்கு முழுக்கப் புதியதொரு வழிமுறையை கண்டு பிடித்தார். மூச்சு விடுவதைக் கவனித்திருப்பது. உள்ளிழுத்து வெளிவிடும் மூச்சைக் கவனித்திருப்பது. இதில் நான்கு நிலைகளைக் கவனிக்க வேண்டும்.
மௌனமாக உட்கார்ந்து மூச்சைக் கவனித்திரு.
1. மூச்சுக் காற்றை உள்ளிழுப்பது ஒரு நிலை.
2. பிறகு ஒரு கணத்துக்கு ஏதும் நடப்பதில்லை. உள்ளிழுப்பதும் இல்லை. வெளிவிடுவதும் இல்லை. மூச்சு நின்று போய்விடுகிறது. மிகச் சிறிய கணத்துக்குத்தான். விநாடிக்கும் மிகக் குறைந்த ஒரு கணம். அப்போது இரண்டாவது நிலையைக் கவனிக்கும் நேரம் வந்துவிடுகிறது.
3. மூச்சுக் காற்று திசை மாறி வெளியே போக ஆரம்பிக்கிறது. இது கவனிக்க வேண்டிய மூன்றாவது நிலை.
4. பிறகு மூச்சுக் காற்றை முழுக்க வெளியே விட்டபின் , விநாடிக்கும் குறைவான நேரம் இயக்கம் நின்று போய்விடுகிறது. அது கவனிக்க வேண்டிய நான்காவது நிலை. பிறகு மூச்சுக் காற்று உள்ளே போகிறது. இப்படியே சுழற்சி தொடர்கிறது.
இந்த நான்கு நிலைகளையும் கவனிக்க முடியும் என்றால் ஆச்சரியப்பட்டுப் போவாய். அவ்வளவு எளிய காரியம். என்றாலும் அவ்வளவு அற்புதமான காரியமும் கூட. இதற்குக் காரணம் அதில் மன ஈடுபாடு என்று ஏதும் இல்லை என்பதுதான். கவனித்திருப்பது என்பது மனதின் காரியமல்ல. கவனித்திருப்பது ஆத்மாவின் இயல்பு , பிரக்ஞையின் இயல்பு.
இதில் சாதகம் என்று ஏதுமில்லை. பழக்கப்படுத்திக் கொள்வது என்று ஏதுமில்லை. அது ஒரு வித்தை. போகப் போக அது உன் வசப்பட்டுப் போகும். போகப் போகக் கற்றுக் கொள்வாய். ஏனென்றால் அப்படிக் கவனித்திருந்த அந்தச் சில விநாடி நேரங்கள் அற்புதமானவை என்பதை அனுபவித்து தெரிந்து கொண்டிருப்பாய்.
அந்த சில விநாடிகளில் அருமையானதோர் அழகிருக்கக் கண்டிருப்பாய். பிரமாதமான ஆனந்தம் இருக்கக் கண்டிருப்பாய். நம்ப முடியாத பரவசத்தை அனுபவித்திருப்பாய். ஒரு முறை சில விநாடி நேரம் அதைச் சுவைத்தவன் மீண்டும் மீண்டும் அதைச் சுவைக்க ஏங்குவான். இதற்கு வேறு எந்த நோக்கமும் இருப்பதில்லை. அப்படி இருக்கும் அந்த ஆனந்தமே போதுமானதாகிப் போகிறது. மூச்சைக் கவனித்திருக்கும் அந்த அனுபவம்.
-ஓஷோ
Credit: ஓஷோ விழிப்புணர்வோடு கூடிய வாழ்க்கைக்கான வழிகாட்டி(Facebook)