சித்தர்களின் சாகாக்கலை (மரணமில்லாப் பெருவாழ்வு) இந்த சித்தர்களின் சாகாக்கலைக்கு முக்கியமான ஒன்றான சர நூல் சாஸ்திரத்தை இங்கே சற்றே விளக்கப் போகிறேன். இந்த சித்தர் சரநூல் சாஸ்திரம் என்பது சிவன் பார்வதிக்குச் சொல்லி, பார்வதி நந்திதேவருக்குச் சொல்லி, நந்திதேவர் அகஸ்தியருக்குச் சொல்லி, அகஸ்தியர் பதிணென் சித்தர்களுக்கு சொல்லி, சித்தர் பரம்பரை வரும் அனைவருக்கும் இரகசியமாக உபதேசிக்கப்பட்டு வருவது.
சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம் (அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.
1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும், 1 நாளிற்கு 21,600மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய் யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120ஆண்டுகளாகும்.
ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12 மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும, உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.
நாம் செய்யும் காரியங்களில் வெற்றி பெறவும், காரியத்தடை நேராமல் தடுத்துக் கொள்ளவும், பலன்களைச் சொல்வதற்கும், கேள்வி கேட்கும் நபருக்கு காரியசித்தியாக்குதலையும், இன்னும் பல காரியங்களுக்கும் இந்த சரநூல் சாஸ்திரம் பயன்படுகிறது. சரம் பார்க்கத் தெரிந்தவனே “பார்ப்பான்” என்று அழைக்கப்படுகிறான். சரம் பார்க்கத் தெரிந்தவனிடம் எந்த மோதலையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே “சரம் பார்ப்பவனிடம் பரம் போகாதே” என்று வழக்குச் சொல்லில் கூறுவர். சரமே இறைவன், எனவே அகத்தியர் தனது சரநுநூல் சாஸ்திரத்தில், சரத்தை இறைவனுக்கு சமமாகவும் பஞ்சபூதங்களின் ஒடுக்க ஸ்தானமாகவும் கூறுகிறார்.
இந்த சரநூல் சாஸ்திரத்தின் விரிவைப் பார்ப்போம். இவை அனைத்தும் சித்தர்களின் ஓலைச்சுவட்டில் இருந்து கிடைத்த சான்று தொடர்ந்து பார்ப்போம்.