ருத்திராட்சத்தின் கீழ்மேலான (நெடுக்குவசத்தில்) அமைந்தகோடுகளை வைத்து அதன் முகங்களை அறிய வேண்டும்.
1. ஒரு முகம்:
சிவஸ்வரூபம் இதைக் கழுத்தில் அணிந்தால் பிரமஹத்தி தோஷத்தைப் போக்கும். இதை அணிந்தவர்களை எதிரிகளால் வெல்ல முடியாது.
2. இரண்டு முகம்:
சிவன், சக்தி ஸ்வரூபம். இதனை அணிவதால் தெரிந்தும், தெரியாமலும் செய்த இருவினைகளும் நீங்கும். கோஹத்தி (பசுவைக் கொன்ற பாவம் நீங்கும்).
3. மூன்று முகம்:
சிவனின் முக்கண். அக்னி ஸ்வரூபம். ஸ்திரீஹத்தி தோஷம் விலகும்.
4. நான்கு முகம்:
பிரம்ம ஸ்வரூபம். நரஹத்தி தோஷம் நீங்கும்.
5. ஐந்து முகம்:
காலாக்னி ருத்திரஸ்வரூபம். தகாததை உண்டது, தகாததைப் புணர்ந்தது முதலிய பாவங்கள் நீங்கும்.
6. ஆறு முகம்:
கார்த்திகேய ஸ்வரூபம். இதை வலது கரத்தில் அணிந்து கொண்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், காயதேசம் கரு அழித்தல் முதலிய பாவங்களைநீக்கும். அஷ்ட ஐசுவரியமும், தேக ஆரோக்கியமும் உண்டாகும். தெளிந்த ஞானம் உண்டாகும்.
7. ஏழு முகம்:
ஆதிசேஷன் அனங்க ஸ்வரூபம். சத்புத்தி, அறிவு, ஞானம் இவற்றைக் கொடுக்கும். கோகத்தியையும், பொற் களவை யும் போக்கும். ஐசுவரியமும், ஆரோக்கியமும் உண்டாகும்.
8. எட்டு முகம்:
விநாயகர் ஸ்வரூபம். அன்னமலை, பஞ்சுபொதி, சொர்ணம், இரத்தினம் இவைகளைத்திருடிய பாவங்களைப் போக்கும். நீச்ச ஸ்திரீ, குற ஸ்திரீ ஆகியோருடன் கலந்த தோஷம் நீங்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
9. ஒன்பது முகம்:
கால பைரவ ஸ்வரூபம். புத்தி முக்திகளைக் கொடுக்கும். பிரம்மஹத்தி முதலான பாவங்களை நீக்கி, சிவகதி கிடைக்கச் செய்யும். சகல காரிய சித்தி உண்டாகும்.
10. பத்து முகமணி:
ஜெனார்த்தன ஸ்வரூபம் என்றும், எமதர்ம ஸ்வரூபம் என்றும் கூறுவர். பூத பிரேத, பீசாசுக்களையும் மரண பயத்தையும் நீக்கும். தசாபுத்தி தோஷங்கள் நீங்கும்.
11. பதினொரு முகம்:
ஏகாதசருத்திர ஸ்வரூபம், பல அசுவமேதயாகம், ராஜசுய யாகங்கள், கோடி கன்னிகாதான பலனையும் தரும். எப்போதும் சௌபாக்கியம் பெருகும்.
12. பன்னிரண்டு முகம்:
துவாதசாதித்யர் மகாவிஷ்ணு ஸ்வரூபம், இதை வலது காதில் அணிந்து கொண்டால் கோமேத, அஸ்வ மேதயாக பலனை த்தரவல்லது. கழுத்தில் அணிந்து கொண்டால் பல புண்ணிய நதிகளில் இத்துடன் நீராடுவதால் அந்த நதிகள் இதனால் புனிதமாகும். சுவர்ண தான பலனையும் கொடுக்கும்.
13. பதிமூன்று முகம்:
சகலதேவ சொரூபம், சண்முக ஸ்வரூபம். இதை அணிந் தால் ரசசித்தி இராசாயண சித்தி முதலியன சித்திக்கும். பித்ரு ஹத்தி, மாத்ரு ஹத்தி முதலிய பாவங்கள் விலகும். சர்வாபீஷ்டம், சர்வ சித்தி கொடுக்கும்.
14. பதினான்கு முகம்:
ருத்ரநேத்ர, சதாசிவ ஸ்வரூபம். இதைச்சிகையில் (குடுமியில்) அணிந்து கொண்டவரின் உடலில் சிவபெருமான் நீங்காமல் இருப்பார். தேவர் ரிஷிகள் முதலானோரை வசப்படுத்தி சிவபதத்தையும் அளிக்கும்.
15. பதினைந்து முகம்:
நாதவிந்து ஸ்வரூபம். பலகலைகளிலும் தேர்ச்சியுறுவர். சகல பாவங்களையும் நீக்கும்.
16. பதினாறு முகம்:
சிவசாயுச்சிய பதவியை அளிக்கும். 14, 15, 16 முகமணிகள் கிடைப்பது அரி தாகும். அறுமுகமணி வலப்புயத்திலும், ஒன்பது முகமணி இடப்புயத்திலும், பதினொரு முகமணி சிகையிலும், பன்னிரெண்டு முகமணிகாதுகளிலும், பதினான்கு முகமணி சிரசிலும் தரிப்பது உத்தமம்.
17. பதினேழு முகம்:
தன்னை அணிந்தவரை குறைந்த காலத்தில் செல்வந்தர் ஆக்கும் தன்மை கொண்டது. கைவினை மற்றும் படைப்பாற்றலுக்குரிய கடவுள் விஸ்வகர்மாவுக்குரியது இந்த ருத்திராக்ஷம்.
இதை அணிபவருக்கு திடீர் செல்வம் மட்டுமல்ல, ஆன்மீக சக்திகளும் வந்து அடையும். இது அணியும் பெண்களுக்கு மன வாழ்க்கை, குழந்தை செல்வம், நல்ல கணவர், நல்ல தாம்பத்யம், நீண்ட ஆயுள் போன்ற அனைத்து நன்மைகளும் ஏற்படும். இதை அணிந்து 'காத்யாயினி' யை வழிபட திருமணமாகாத பெண்களுக்கு உடனடி வரன் அமையும். பல்வேறு வகையில் திடீர் செல்வம், அதிர்ஷ்டம் தர வல்லது இந்த ருத்திராக்ஷம்.
ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டதாக இருப்பினும், அதன் புனிதம் அற்புதமானது. எளிதில் கிடைக்கும் ருத்திராட்ச மணியை வாங்கி பால், தேன், பஞ்சகவ்யம், புண்ணிய தீர்த்தத்தாலும், மேலான சிவலிங்க அபிஷேக தீர்த்தத்தால் சுத்தம்செய்து, திரியம்பக மந்திரம், திருஐந்தெழுத்தை ஓதி அணிய வேண்டும்.