உன் உடல் எப்போதும் சாம்பலால் {திருநீற்றால்} பூசப்பட்டிருக்கிறது. உனது லிங்கச் சின்னம் எப்போதும் மேல்நோக்கியே இருக்கிறது. ருத்திரன் என்ற அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(80)
அரைபிறை வடிவங்கள் உன் நெற்றியின் ஆபரணங்களாகும். கழுத்தைச் சுற்றும் புனித நூலாகப் பாம்புகளைக் கொண்டவன் நீயே. பிநாகை மற்றும் திரிசூலதாரி நீயே. கடூரத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(81)அனைத்து உயிரினங்களின் ஆன்மா நீயே. அனைத்துயிரினங்களைப் படைப்பவனும், அழிப்பவனும் நீயே. கோபம், பகை, பாசம் ஆகியவை அற்றவன் நீயே. அமைதியாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(82) அனைத்தும் உன்னில் இருக்கின்றன. ஒவ்வொரு பொருளும் நீயே. எங்கும் இருப்பவன் நீயே. எங்கும், எப்போதும் அனைத்துமாக இருப்பவன் நீயே. ஒவ்வொரு பொருளிலும் இருக்கும் உன் வடிவை நான் வணங்குகிறேன்.(83)
அண்டத்தையே செயலாகக் கொண்டவனும், அண்டத்தின் ஆன்மாவாக இருப்பவனும், அண்டம் எழுந்த பொருளாக இருப்பவனும், அனைத்துப் பொருள்களுக்கும் அழிவாக இருப்பவனும், (அனைத்துப் பொருட்களில் இருக்கும் பூதங்களான) ஐந்தைக் கடந்தவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(84)
மூவுலகங்களாய் இருப்பவனும், மூவுலகங்களிலும் மேன்மையானவனுமான உன்னை நான் வணங்குகிறேன். திசைகள் அனைத்துமான உன்னை நான் வணங்குகிறேன். அனைத்தும் நீயே, அனைத்தின் ஒரே கொள்ளிடம் நீயே.(85)
ஓ! தெய்வீகத் தலைவா, ஓ! விஷ்ணு, ஓ! அனைத்து உலகங்களின் நித்திய மூலமே உன்னை நான் வணங்குகிறேன். ஓ! ரிஷிகேசா, படைப்பவனும் நீயே, அழிப்பவனும் நீயே, வெல்லப்படமுடியாதவன் நீயே.(86)
மஹாபாரதம். சாந்தி பர்வம்.