கிட்கிந்தை நகரில் நடந்த செய்திகளைக் கூறுவதால் இப்பெயர் பெற்றது. குறித்த காலத்தில் சுக்கிரீவன் வராமையால் இராமன் சினந்து இலக்குவனை அனுப்புகிறான். கிட்கிந்தைக்கு இலக்குவன் வந்ததைச் சுக்கிரீவனுக்குத் தெரிவிக்கின்றார்கள்; அங்கதன் அனுமன் இருவரும் தாரையின் கோயிலை அடைந்து அவளிடம் பேசுகின்றார்கள்.
வாயிலைத் தாளிட்டுக் குரங்குகள் போருக்கு ஆயத்தமான நிலையறிந்த இலக்குவன் கதவுகளை உடைத்தெறிகின்றான். அனுமன் கூறியபடியே தாரை இலக்குவன் முன்னாக வருகிறாள்; மகளிரைப் பார்க்க அஞ்சும் இலக்குவனிடம் தாரை பேசுகின்றாள்;
இலக்குவன் தன் தாயரை நினைந்து உருகுங்கால் தாரை அவனது சினத்தைத் தணிவிக்கின்றாள். பின்னர் அனுமன் இலக்குவனுக்குச் சமாதானம் கூறுகின்றான்; சினம் தணிந்த இலக்குவனும் அனுமனோடு சுக்கிரீவனைக் காணச் செல்லுகின்றான். சுக்கிரீவன் இலக்குவனைப் பார்த்ததும், தான் மதுவுண்டு மயங்கிக் கிடந்தமைக்கு வருந்துகின்றான்.
அதனால் இலக்குவனது சீற்றமும் தணிகிறது. அவனது மாளிகை சென்ற இலக்குவன் அரியணையில் அமராமல் கல்தரையில் அமர்கின்றான். பின் அனுமனைச் 'சேனையுடன் வருக' என ஏவிய சுக்கிரீவன் இராமனைக் காணச் செல்ல, இராமனும் சுக்கிரீவனது நலன் உசாவுகின்றான். தன் பிழைக்கு வருந்திய சுக்கிரீவனது குற்றம் நீக்கி இராமன் பாராட்டுகிறான். அனுமன் சேனையுடன் வருவான் என இராமனிடம் சொன்ன சுக்கிரீவனையும், அங்கதனையும் அனுப்பிவிட்டு இராமன் தன் தம்பியுடன் தங்கியிருக்கிறான்.