நபிகள் பெருமானார் அவர்களுடைய நாற்பதாவது வயதிலே, ரமளான் மாதத்தின் பிந்திய இரவுகளில் ஓர் இரவன்று, மக்கமா நகருக்கு அருகிலுள்ள ஹிராக் குகையிலே தனித்திருந்து, இறைவனைச் சிந்தித்திருந்த நேரத்தில் தான் திருக் குர்ஆன் முதன் முதலாக அருளப் பெற்றது. அந்த இரவு தான் “லைலத்துல் கத்ர்” (கண்ணியமிக்க இரவு) என்று அறியப்படுகிறது.
மாண்புமிக்க அந்த இரவிலே முதன் முதலாக அருளப் பெறத்துவங்கிய இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, - பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-வருடங்களில்- கொஞ்சங் கொஞ்சமாக அருளப்பெற்று பூர்த்தி பெற்றது.
இவ்வாறு அந்த 23-ஆண்டுகளில் இறைவனால் அறிவிக்கப்பட்டதே திருக் குர்ஆன்.