அகத்தியர் அருள்வாக்கு 2

அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?

புலஸ்தியரின் மானச யுக புருஷர் அகத்திய மாமுனிவர்.

அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நலமான வாழ்வு நல்விதமாய் அமைந்திட நலமான வழிமுறைகளையெல்லாம் நாளும் மாந்தர்கள் கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் தான்.

இயம்பிடுவோம் எத்தனைதான் ஒரு மனிதனுக்கு விதி அவன் வாழ்விற்கு எதிராக இருந்தாலும், அவன் மதியை ஆக்கிரமித்து அவனுக்கு தவறான வழிகளைக் காட்டினாலும், மீண்டும், மீண்டும் சரணாகதி பக்தியாலும் அல்லது தன்னுடைய மனச்சான்றின் வழிகாட்டுதல் படியும் ஒரு மனிதன் சரியான வழிமுறைகளை பின்பற்ற முயற்சி செய்திட வேண்டும்.

இறைவனின் கருணையாலே விதி வழி ஒருவன் தவறு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே இதற்கு விதிதான் பொறுப்பு அல்லது எல்லாம் வல்ல இறைவன் பொறுப்பு என்றெல்லாம் மனிதர்கள் எண்ணிவிடக்கூடாது. ஒன்று எல்லாம் விதி என்ற நிலைக்கு வந்துவிட்டால் ஒரு விதி தவறு செய்யத் தூண்டுகிறது. அஃது விதியின் குற்றமே என்று கூறும்பொழுது அப்படியாெரு தவறை செய்து அதன் விளைவாக கடுமையான தண்டனையையும் அந்த விதிதான் தருகிறது என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய மனோபாவம் வந்துவிட வேண்டும். இறைவனின் கருணையாலே விதி குறித்தும், கர்மவினைகள் குறித்தும் மகான்கள் கூறுவது எப்பொழுதும் மனிதர்களை அச்சப்படுத்த அல்ல. விழிப்புணர்வோடு வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகத்தான். 

இஃதாெப்ப, ஆத்மா சிறைப்பட்டுள்ள கூடான தேகத்தை நன்றாக பராமரித்து வருதலும், அப்படி பராமரிக்காமல் விட்டுவிட்டு கடுமையான பிணி தாக்கும்பொழுது விதிதான் என்று கூறுவதும் மனிதர்களின் இயல்புதான். விதிதான், நாங்கள் மறுக்கவில்லை. விதி வழியாக ஒரு மனிதனுக்கு கடுமையான பிணி, வரும் காலத்தில் வரட்டும். அவன் எத்தனைதான் சாத்வீக உணவுகளை உண்டாலும், எத்தனைதான் தேகப்பயிற்சிகளை செய்தாலும், எத்தனைதான் பிராணாயாமம், யோகாசனங்களை செய்தாலும், ஒரு காலகட்டத்திற்கு பிறகு தேகம் கடுமையான பிணியால் பாதிக்கப்படவேண்டும் என்ற விதி இருக்குமாயின் பாதிக்கப்பட்டே ஆகும். அஃதல்ல பிரச்சனை. அப்படி பாதிக்கப்பட வேண்டும் என்பதாலேயே ஒரு மனிதன் தேகப்பயிற்சி செய்யாமலோ அல்லது தேகத்தை முறையாக பராமரிக்காமல் விட்டுவிட வேண்டும் என்பது பொருளல்ல. விதி வழியாக நடப்பது, நடந்துவிட்டுப் போகட்டும். அதே சமயம் இறைவனை எண்ணி நேரிய வழியில் ஒரு மனிதன் தன் கடமைகளையும் ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும். மகான்கள் கூறுவது பல்வேறு தருணங்களில் குழப்பமாக இருப்பதுபோல் மனிதர்களுக்கு தோன்றும். 'எல்லாம் விதி. அதன் வழியாக வாழ்ந்து விட்டுப்போ' என்பதுபோல் சிலசமயம் மகான்கள் கூறுகிறார்கள். சில சமயம் விதிக்கு எதிராக கூறுகிறார்கள் அல்லது விதிக்கு எதிராக முயற்சி செய்யுமாறு கூறுகிறார்களே? என்றால் என்ன பொருள். இரண்டுமே மெய்யிலும் மெய். அதே சமயம் சரியான பக்குவமும், புரிதலும் இல்லையென்றால் இஃதுபோன்ற கர்ம ஞான விஷயங்களை ஒரு மனிதனுக்கு குழந்தை கையில் கிட்டிய ஆயுதம் போல் ஆகிவிடும். எனவே சரியான புரிதலை ஒரு மனிதன் புரிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும். அந்த சரியான புரிதலும், தெளிவான ஞானமும், பாவங்கள் இருக்கும்வரை ஒரு மனிதனுக்கு அத்தனை எளிதாக சித்திக்காது. சித்திக்காது என்றாலும் தக்கவர்கள் கூறுகின்ற வழிமுறைகளை அவன் பின்பற்றத்தான் வேண்டும். ஆனால் அவனுடைய தெளிவற்ற மனம், தெளிவான சிந்தனையை என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை. தான் எண்ணுவதும், தான் நினைப்பதும் தனக்கு போதிக்கப்பட்ட விஷயங்கள் மட்டுமே மெய் என்று எண்ணுவதாேடு, புறத்தே இருந்து வருகின்ற விஷய ஞானத்தைக்கூட தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையிலே மட்டும்தான் மனிதன் ஏற்கவும் மறுக்கவும், முற்படுகிறான். 

Credit: Thiru. Thanjai Ganeshan

More like this

Leave a Reply

Error message here!

Show Error message here!

Forgot your password?

Show Error message here!

Lost your password? Please enter your email address. You will receive a link to create a new password.

Back to log-in

Close