
நல்ல ஆரோக்கியத்தையும், நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியையும் தரவல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம். அந்த உடலுக்கு ஏற்பட்ட நோய்கள் மட்டுமின்றி ஆத்மாவைப் பீடித்துப் படுத்தும் நோயாகிய பிறவிப் பிணியையும் போக்க வல்ல மருந்து விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.
அந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள 1000 திருநாமங்களின் பொருளை எளிய கதைகள் மூலம் உணரலாம், வாருங்கள்.
பத்மநாபாய நமஹ. (திருநாமங்கள் 346 முதல் 351 வரை – வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)
திருமங்கை ஆழ்வாருக்குத் திருமாலிடம் இருக்கும் காதல் உச்சத்தைத் தொட்ட அளவிலே, பரகால நாயகி என்னும் பெண் தன்மையை அடைந்தார் திருமங்கை ஆழ்வார். அந்தப் பரகால நாயகி அவ்வப்போது தலைவனாகிய திருமாலைச் சந்தித்து அவனோடு உறவாடுகிறாள்.
இக்காதலைப் பற்றிக் கேள்விப்படுகிறாள் நாயகியின் தாய். “பெண்ணே! இது நம் குடும்ப மானத்துக்கு ஏற்ற செயல் அல்ல!
நீ இப்படி ரகசியமாகக் காதல் கொள்வது நம் கௌரவத்துக்கே இழுக்கு!” என்று சொல்லித் தலைவனைச் சந்திக்க விடாமல் பரகால நாயகியைத் தடுத்து விடுகிறாள் தாய்.
பரகால நாயகி தன்னைச் சந்திக்க வராதபடியால், அவளுக்கு என்ன ஆயிற்று என்று அறிய விரும்புகிறார் தலைவனாகிய திருமால். பரகால நாயகி ஊருக்கு வெளியே உள்ள பூந்தோப்பில் பூக்கொய்யச் சென்றிருக்கிறாள் என்ற செய்தியைத் திருமால் கேள்விப் படுகிறார். வேட்டைக்காரனாக வடிவம் பூண்டு, இடக் கையில் வில்லும் வலக் கையில் அம்பும் முதுகிலே அம்பறாத் தூணியும் தாங்கியபடி அந்தப் பூந்தோப்புக்குள் நுழைகிறார்.
தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். ஆனந்தமாக இருக்கிறார்கள். அதன்பின் தலைவனாகிய திருமால், “என் ஊரான திருவரங்கத்துக்குப் போகிறேன்!” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டுச் சென்று விடுகிறார். அதன்பின் அவளது தோழி வந்து தலைவியைச் சந்தித்து, “தலைவன் வந்தானா? அவன் எப்படி இருந்தான்? அவனைப் பற்றி எனக்குச் சொல்!” என்று கேட்கிறாள்.
அதற்குப் பரகால நாயகி விடையளிக்கிறாள்:
“மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ
மகரம் சேர்க் குழை இருபாடு இலங்கி ஆட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என்முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரை வாய்க்கமலம் போலும்
கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அவ்வண்ணத்து அவர்நிலைமை கண்டும் தோழீ
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே!”
“தோழியே! கரிய, வாசம் மிக்க, அலகலகாய் இருக்கும் குழல் கற்றைகள் பின்னே அலைந்திட, இரு காதுகளிலும் மகரக் குண்டலங்கள் அசைந்திட, தெய்வத் தன்மை மனிதத் தன்மை இரண்டும் தோற்றிட,கையில் வில் ஏந்திக் கொண்டு தலைவன் என் முன்னே வந்து நின்றார். அவரது திருமேனியின் ஒவ்வொரு அங்கமும் தாமரையை ஒத்திருக்கும். அவரது திருக்கரங்கள், திருவாய், திருக்கண்கள், திருவடிகள் அனைத்துமே தாமரை போன்றவை.
கைவண்ணம் தாமரை- முதலில் தாமரை போன்ற கரங்களால் என் கையைப் பிடித்துக் கொண்டார். வாய்க் கமலம் போலும் – தாமரை போன்ற திருவாயினாலே இன்மொழிகள் பேசினார். கண் இணையும் அரவிந்தம் – தாமரை போன்ற திருக்கண்களாலேயே பேசித் தனது காதலை என்னிடம் தெரிவித்தார். அடியும் அஃதே – அந்தக் கண்ணழகுக்குத் தோற்ற நான் அவரது தாமரை போன்ற திருவடிகளில் விழுந்து அவற்றைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டேன்.
இத்தகைய இறைவன் என் முன்னே வந்து நின்று உறவாடியவாறே, அவரது பெருமையை எண்ணி அஞ்சி நான் சற்றே விலகி நின்று விட்டேன்!” என்று நடந்தவற்றை எல்லாம் விவரித்தாள் பரகால நாயகி.
இத்தகைய அற்புதமான அகத்துறை பக்திப் பாசுரத்தில் வரும் “கை வண்ணம் தாமரை, வாய்க்கமலம் போலும், கண்ணிணையும் அரவிந்தம், அடியும் அஃதே” என்ற தொடரில், தாமரை, கமலம், அரவிந்தம் அனைத்துமே தாமரை மலரைக் குறிக்கும் வார்த்தைகளே.
அதாவது, திருமாலின் ஒவ்வொரு அங்கமுமே தாமரை போலே இருக்கிறது என்பதே இதன் கருத்தாகும். தாமரையில் நாம் காணக்கூடிய குளிர்ச்சி, அழகு, மென்மை, நறுமணம் போன்ற நற்பண்புகள் அனைத்தும் மேலும் சிறப்பாக இறைவனின் அங்கங்களில் உள்ளன என்பது தாத்பரியம். அந்த வகையில், திருமாலின் உந்தியும் (கொப்பூழும்) தாமரை போலவே இருக்கிறது. அதாவது தாமரைக்கே உரிய குளிர்ச்சி, அழகு, மென்மை, நறுமணம் ஆகிய அனைத்து நற்குணங்களும் நிரம்பப் பெற்றிருக்கிறது. தாமரை போன்ற உந்தியை உடையவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘பத்மநாப:’ என்றழைக்கப்படுகிறார்.
‘பத்ம’ என்றால் தாமரை, ‘நாபீ’ என்றால் உந்தி, ‘பத்மநாப:’ என்றால் தாமரை போன்ற உந்தியை உடையவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 348-வது திருநாமம்.
(முக்கியக் குறிப்பு: 48-வது மற்றும் 198-வது திருநாமங்களாகவும் இதே ‘பத்மநாப:’ என்ற திருநாமம் வருகிறது. அவ்விரு இடங்களிலும், உந்தித் தாமரையில் பிரம்மாவைப் படைத்தவர், உந்தியிலே தாமரையை உடையவர் என்ற ரீதியில் பொருள் உரைக்கப்பட்டது.
இங்கே 348-வது திருநாமமாக வரும் ‘பத்மநாப:’ என்பது பரவாசுதேவனைக் குறிப்பதால், அதற்குப் பொருத்தமாகத் தாமரை போன்ற உந்தியை உடையவர் என்று உரையாசிரியர்கள் பொருள் உரைத்துள்ளார்கள்)“ பத்மநாபாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் உடல் பருமன், அதிக உடல் எடை போன்றவை இல்லாமல் அளவான, ஆரோக்கியமான உடல் அமைப்புடன் திகழத் திருமால் அருள் புரிவார்.