குருவாயூரில் நாராயண பட்டத்திரி உபன்யாசம் செய்து கொண்டிருந்தார், அப்போது அதை, ஏராளமானோர் கேட்டபடி இருக்க, சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்த பூந்தானம் என்ற பக்தர், அதைக் கேட்டு, அப்படியே மெய் மறந்து நின்றார். நிகழ்ச்சி முடிந்து வெளி வந்த பட்டத்திரி, பூந்தானத்தை பார்த்து நலம் விசாரித்தார். அவருடைய பேச்சில் ஞானம், பக்தியை விட, ஏளனமும், கர்வமும் தலைதூக்கி இருந்தன. அதை புரிந்து கொள்ளாத பூந்தானம், ’உத்தமரே... அவ்வப்போது நானும் கண்ணனை தியானம் செய்கிறேன்; இருப்பினும், கண்ணனின் முழு வடிவத்தை தியானிக்க முடியாமல் சிரமப்படுகிறேன். நல்லதொரு வழியை காட்டுங்கள்...’ என, பணிவோடு வேண்டினார்.
அவருடைய அப்பாவித்தனம், பட்டத்திரியின் வித்யா கர்வத்தை தூண்ட, ’பூந்தானம்... நீ அந்த பரந்தாமனின் பக்தன் தானே... அவனை எருமை மாடு வடிவத்தில் கூட தியானிக்கலாமே...’ என, விளையாட்டாக கூறினார். அதை, அப்படியே நம்பி, கண்ணனை எருமை மாடு வடிவத்திலேயே தியானிக்க துவங்கினார், பூந்தானம். அவருடைய தீவிரமான தியானத்தால், அவருக்கு, எருமை மாடு வடிவத்திலேயே காட்சி கொடுத்தார், கண்ணன். ஒருநாள், குருவாயூர் கோவில் உற்சவத்தின் போது, உற்சவரை வெளியே கொண்டு வர முயன்றனர்; முடியவில்லை. படிக்கட்டில் ஏதோ இடிப்பதை போல இருந்தது. ஆனால், கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அப்போது, சற்று தூரத்தில் இருந்த பூந்தானத்தின் கண்களுக்கு, உற்சவ மூர்த்தி, எருமை மாடு வடிவத்தில் காட்சியளித்தார்.
அம்மகிஷத்தின் கொம்பு இடிப்பதாலேயே உற்சவர் வெளிவர முடியவில்லை என்பது, பூந்தானத்திற்கு புரிந்தது. அவர் உடனே, ’சற்று வலது கை புறமாக சாய்த்து எடுங்கள்; அங்கு தான் கொம்பு இடிக்கிறது. அதனால் தான், சுவாமியால் வெளி வர முடியவில்லை...’ என்றார். அவர் சொல்வது புரியாவிட்டாலும், அப்படியே செயல்பட்டனர்; உற்சவர் வெளியே வந்து விட்டார். அதேசமயம், கர்ப்பகிரகத்தில் சுவாமிக்கு பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சருக்கு, இறைவன், எருமை மாடு வடிவில் காட்சியளித்து, ’என் பக்தனான பூந்தானம், இவ்வடிவில் தான், என்னை தியானித்து வருகிறான்...’ என, விவரித்தார்.
அர்ச்சகருக்கு, கண்ணனின் கருணையும், அக்கருணைக்கு பாத்திரமான பூந்தானத்தின் தூய்மையான பக்தியும் புரிந்தது. வேகமாக வெளியில் வந்து, பூந்தானத்தின் திருவடிகளில் விழுந்து, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அப்போதுதான்,மற்றவர்களுக்கு பூந்தானம் ஏன் கொம்பு இடிக்கிறது என்று கூறினார் என்பதன் காரணம் புரிந்தது. உடனே பட்டத்திரி தன் மனம் திரிந்தி பூந்தானத்தின் திருவடியில் வீழந்தார் இந்த பூந்தானமே தன் புத்ர சோகத்தால் ஞான பானை என்ற அற்புதமான பாடலை மலையாளத்தில் குருவா யூரப்பன் மேல் பாடகிருஷ்ண பக்தரான பூந்தானம் செய்யும் பாகவத உபன்யாசங்களை மக்கள் மிகவும் நேசித்தார்கள் ஒரு நாள் கேரளாவில் உள்ள கொட்டியூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவில் வருடத்தில் சில நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும்.
பூந்தானம் கொட்டியூர் சென்று அங்குள்ள குளத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு மிகுந்த சந்தோஷத்துடன் அங்கேயே சில நாட்கள் தங்கினார். தினசரி கோவிலில் சிவன் முன்னால் பாகவத ப்ரவசனம் செய்தார். நூற்றுக்கணக்கான மக்கள் அவருடைய இனிமையான பிரவசனத்தைக் கேட்டார்கள். ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணர் விளையாட்டாக ருக்மிணியிடம், சிசுபாலன், ஜராசந்தன், சால்வன் போன்றோர் இருக்கும்போது என்னை ஏன் திருமணம் செய்தாய் என்று பரிஹாஸமாகப் பேச, ருக்மிணி மயங்கி விழ, பின்னர் கிருஷ்ணர் சமாதானம் செய்வதைக் கூறும் ஸர்க்கம். பூந்தானம் இந்தப் பகுதியை வாசித்து முடித்து, அடுத்த நாள் தொடர்வதற்கு வசதியாய் அந்த அத்தியாயத்தின் முடிவில் அடையாளம் வைத்தார்.
ஆச்சர்யப்படும் வகையில் அடுத்த நாள் அவர் வைத்த அடையாளம் அந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் இருந்தது. அதனால் மறுபடியும் அந்த ஸர்க்கத்தையே வாசித்தார். மீண்டும் சில நாட்களுக்கு இவ்வாறு தொடர்ந்து நடந்தது. கோவிலை மூட வேண்டிய நேரம் வந்தது. பூந்தானம் பிரவசனத்தை முடித்து, வீட்டிற்குத் திரும்பும் வழியில் பாகவத புத்தகத்தைக் கோவிலிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார். அதை எடுக்க மீண்டும் கோவிலுக்குச் சென்றார். ஆனால் நடை சாத்திவிட்டார்கள். யாருமே அருகில் இல்லை. அவர் ப்ரவசனம் செய்த பாகவத அத்தியாயத்தின் அதே பகுதியை யாரோ கோவிலின் உள்ளிருந்து சொல்வதைக் கேட்க முடிந்தது. சாவி த்வாரத்தின் வழியே உள்ளே பார்த்தார். அங்கே அவர் கண்ட காட்சி!!!
பரமசிவனே அதைப் படித்துக் கொண்டிருந்தார். பார்வதிதேவியும், பூதகணங்களும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பூந்தானம் அசையாமல் அதைக் கேட்டார். கடைசியில் சிவன் பார்வதியிடம், நான் படித்த இந்த பாகவத ஸர்க்கம் உனக்குப் பிடித்ததா? என்று கேட்க, பார்வதி, “ நன்றாக இருந்தது, ஆனால் பூந்தானம் சொன்னதைப்போல் இல்லை” என்று கூறினாள். சிவனும், உண்மைதான் நானும் பூந்தானம் சொல்வதையே கேட்க ஆசைப்படுகிறேன். அதனால்தான், தினமும் அவர் வைத்த அடையாளத்தை இந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் வைத்தேன் என்று கூறினார்.
வெளியே நின்றுகொண்டிருந்த பூந்தானம் இதைக் கேட்டவுடன் மெய்சிலிர்த்து, க்ருஷ்ணா, க்ருஷ்ணா என்று உரக்கக் கூறினார். அவர் மீண்டும் பார்த்தபோது, சிவபெருமானும் பார்வதியும் மறைந்து விட்டனர். பாகவதத்தை ஏனைய தெய்வங்களும் நேசிக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே சான்று. இவ்வாறு பாகவத பாராயணத்திலும், கிருஷ்ண நாமத்திலும் பூந்தானத்தின் காலம் ஓடியது. பூந்தானத்திற்கு வயதாகியது. ஒரு நாள் கிருஷ்ணன் பூந்தானத்தை ‘என்னிடம் வா’ என்று அழைத்தார்.
மிகுந்த சந்தோஷமடைந்த பூந்தானம், வீட்டில் உள்ளவர்களிடம், நாளை விஷ்ணுதூதர்கள் நம் இல்லத்திற்கு வருகிறார்கள். வீட்டை நன்கு அலங்கரியுங்கள்; யாரெல்லாம் கிருஷ்ணனைக் காண வருகிறீர்கள் என்று கேட்டார். எப்போதும் கிருஷ்ணனை நினைத்து அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவரது வீட்டாரும், அவ்வூர் மக்களும் நினைத்தார்கள்.
அடுத்த நாள் வானரதம் வருவதைக் கண்ட அவர், மனைவியிடம் சீக்கிரம் வா, நாம் செல்லலாம் என்று கூறினார். அவர் மனைவிக்கு சமையற்கட்டில் வேலை இருந்ததால் உள்ளே சென்றுவிட்டாள். அப்போது, அவர் வீட்டில் வேலைசெய்த ஒரு பெண், நான் வருகிறேன், என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று வேண்டினாள். பூந்தானமும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டார். வேலை முடிந்து அவர் மனைவி வந்து பார்த்தபோது வேலைசெய்த அந்தப் பெண்மணி இறந்திருந்தாள். பூந்தானத்தைக் காணவில்லை; பூந்தானம் உடலோடு கிருஷ்ணனோடு ஐக்கியமாகிவிட்டார்.
இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி.
Credit: ஸ்ரீ மஹா பக்த விஜயம்