கோயம்புத்தூரில் இருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் புளியம்பட்டி உள்ளது. அங்கிருந்து 10 கிலோ மீட்டர் சென்றால் இரும்பறையில் உள்ள ஓதிமலை முருகன் கோயிலை அடையலாம்.
முருகப்பெருமான் கோவில் கொண்டிருக்கும் மலைகளிலேயே மிக உயரமானதாகவும், செங்குத்தானதாகவும் இந்த மலை அறியப்படுகிறது. சுமார் 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட இருந்த மலையில் வீற்றிருக்கும் இறைவனைக் காண, 1,800 படிகள் எறிச்செல்ல வேண்டும்.
எந்த ஒரு தொழிலையும் புதியதாகத் தொடங்குவதற்கு முன்னர், இத்தல முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு செய்வது வழக்கமாக இருக்கிறது. தொழில் மட்டுமல்லாமல், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் செய்வதாக இருந்தாலும் பூ போட்டு கேட்கும் வழக்கம் இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையவும் இத்தல முருகப்பெருமானை வேண்டிக்கொள்ளலாம்.
ஓதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து திருமுகங்களும் எட்டு கரங்களும் கொண்ட முருகப்பெருமானைத் தரிசிக்கலாம்.