ஸந்துக்கள் துகாராம் மஹாராஜிடம் "உங்களுக்கு வைராக்கியம் எப்படி வந்தது", என்று கேட்டபோது அவர் அளித்த பதில்.
துகாராம் மஹாராஜ் கூறுகிறார், "எனது ஜாதி சூத்திர வம்சம், தொழில் வியாபாரம், முதலிலிருந்தே குலத்திற்குத் தெய்வமாக இருப்பவனைப் (விட்டலனை) பூஜித்து வருகிறேன். நானே என்னுடைய வரலாற்றை யாருக்கும் சொல்லுவதில்லை. ஸந்துக்களாகிய நீங்கள் கேட்டதால், உங்களுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன். நான் இப்பிரபஞ்சத்தில், துக்கத்தின் அதிதுக்கத்தை அனுபவித்திருக்கிறேன். தாய், தந்தையர் உலகை விட்டுப் போய்விட்டனர். பஞ்சத்தினால் செல்வத்தை இழந்தேன். அதனால், மானமும் அழிந்தது. ஒரு மனைவி "அன்னம், அன்னம்" என்று சொல்லிக்கொண்டே மரித்தாள். இந்த துக்கங்களினால் மிகவும் வெட்கம் அடைந்தேன். வாழ்க்கை பயமுள்ளதாயிற்று. வியாபாரத்தைப் பார்த்தால், படுத்துவிட்டது. விட்டலனின் ஆலயம் பழுதடைந்து போய் விட்டது. அதைப் புதுப்பிக்க வேண்டும் என்று மனதில் பட்டது.ஆரம்பத்தில், ஒருநாள் கீர்த்தன் செய்தேன். முதலில் பயிற்சியில் மனம் நாடவில்லை. ஸந்துக்களின் வசனத்தில் நம்பிக்கை வைத்து, பக்தியுடன் அவ்வசனங்களைப் படித்தேன். அதன் பின், சித்தத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்டு, பாவத்துடன் அவர்களின் த்ருபதங்களை (பல்லவிகளை) பாடினேன். ஸந்துக்களின் பாத தீர்த்தத்தைப் பருகினேன். அதனால், மனதில் வெட்கம் போய்விட்டது. என் சரீரத்தைக் கஷ்டப் படுத்திக்கொண்டு, ஏதோ (மற்றவர்களுக்கு) உபகாரம் செய்தேன். நெருங்கியவர்கள் (மற்றவர்களைப் போல இரு என்று) சொன்னதை, நான் மதிக்கவில்லை.
மொத்த பிரபஞ்சத்தின் மீதும் வெறுப்பு வந்தது. நல்லது எது? கெட்டது எதுவென்ற விஷயத்தில் நான் உலகத்தினரின் அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. என் மனதில் பட்டதையே ஸாக்ஷியாகக் கொண்டேன். சொப்பனத்தில் குரு செய்த உபதேசத்தை மதித்து, அந்த நாமத்தில் திடமான நம்பிக்கை வைத்தேன். அதன் பின்னர், கவி புனையும் ஆற்றல் விட்டோபாவின் அருளினால்கிடைத்தது. நான் விடோபாவின் சரணங்களில் மனதை பதித்துக் கொண்டேன். எனது அபங்கங்கள் நிந்திக்கப் பட்டு, ஆபத்து ஏற்பட்டது. அதனால் மனம் துயருற்றேன்.
நான் இயற்றிய அபங்கங்கள் எழுதப்பட்ட புஸ்தகங்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டன. நான் ’தர்ணா’வில் அமர்ந்தேன். அவற்றை ரக்ஷித்து நாராயணன் என்னை ஸமாதானப் படுத்தினான். இந்த விஷயங்களை) இன்னும் பலபடியாக விஸ்தரித்துக் கூறினாலும், பின்னும் மீதி இருக்கும். ஆகையால், இப்போது நிறுத்திக் கொள்வோம். இப்போதுள்ள நிலமை தெரிகிறது. ஆனால், மேற்கொண்டு நடக்கப் போவதை பகவானே அறிவான். நாராயணன் தன் பக்தர்களை ஒருபொழுதும் அசட்டை செய்ய மாட்டான். அவன் கிருபாவந்தன் என்பதை நான் தெரிந்து கொண்டேன். பாண்டுரங்கனே எனது பொக்கிஷம், அவன் தனது வாக்குகளை என் வாயால் சொல்ல வைக்கிறான்.
நாமமே பலம் நாமமே சாதனம்; இராம் க்ருஷ்ண ஹரி, பாண்டுரங்க ஹரி;
Credit: Vittal Saravanan