வெற்றியடைய சிறந்த வழி
உன் வாழ்க்கை உன் கையில். எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என நாம் படித்ததை செயல்படுத்த, நம்மில் உதிக்கும் நல்ல எண்ணங்கள் ஒவ்வொன்றையும் அழகழகாய் வடிவமைக்க வேண்டியது நம் கடமை என நம்பவேண்டும்.
"பாசிடிவ் பாசிடிவ்... இதுதான் நம்முள்ளும், நம் வெளியேயும் நிகழும் எண்ணமாய் இருக்கிறது" என மனதில் தீர்மானம் கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் பார்வையில் முட்டாளாகத் தெரிகிறோமா? புத்திசாலியாக தெரிகிறோமா? என்று மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று, உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றிய கவலை இல்லாமல் இருக்க வேண்டும்.
குறை கூறுபவர்கள் யாரையாவது குறை கூறிக்கொண்டேதான் இருப்பார்கள். மற்றவர்களை திருப்திபடுத்த நினைக்காமல், அவரவர் வாழ்வை அவரவரே தான் சமாளித்து வாழ வேண்டும்.
நீ நீயாக இரு. மற்றவர்களுக்காக மாறிக்கொண்டிருந்தால், உனக்காக வாழவே முடியாது.
நீ உன்னுள்ளே இருக்கும் கடவுளை உணர்ந்து, வாழ்ந்தால் போதும். மற்றவர்களுக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் அது உன் குற்றமில்லை.
கண்ணில் பிழை இருந்தால் பிம்பமும் பிழையே. அது பார்ப்பவனின் பிழை.
உண்மையான அன்பை கடைபிடி, விருப்பு வெறுப்பின்றி அன்பு கருணை கொண்டு வாழு.
மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றியும், மற்றவர்களின் மனநிலை பற்றியும், நாம் ஆராய்ச்சி செய்யாமல், தன்னை பற்றிய ஆராய்ச்சி இருந்தால் வீண் பிரச்சனைகள் வராது.
பக்குவ நிலை என்பது, எந்த சூழ்நிலையிலும் தவறு செய்ய வாய்ப்பு இருந்தாலும், தவறு செய்யாமலிருப்பது. மற்றவர்களை காயப்படுத்த வாய்ப்பிருந்தும், காயபடுத்தாமல் கடந்து செல்வதே..
மனதில் பக்குவ நிலை அடைந்தவர்கள், எந்தப் பிரச்னைக்கும் அஞ்சுவதில்லை, எதற்கும் கவலைப்படுவதில்லை. தன் எதிரியாக யாரையும் நினைக்காமல், எல்லோருக்கும் நல்லதே நடக்க நினைப்பவனே, நல்ல மனம் படைத்தவன்.
எதையும் எதிர்பார்க்காமல், அனைத்தும் இறைவனின் செயல், என்று நிகழ்வதனைத்தையும் சமநிலையில் ஏற்றுக்கொண்டு தன்னுள்ளிருக்கும் கடவுளை உணர்ந்து ஆனந்தமாக வாழ்வதே வெற்றி.